நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளதார பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கபில சேனாநாயக்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளர் கலாநிதி அனில் பெரேரா நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் தமது ஆலோசனைகளை தெரிவித்தனர்.
புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. உற்பத்தித் துறையை வலுப்படுத்த நிவாரணம் வழங்க வேண்டியதன் அவசியத்தையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.74 வருடங்களாக உருவாகி வந்த பொருளாதார நெருக்கடி ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொவிட் தொற்றுடன் அதிகரித்துள்ளதையும் அவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமைக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக் குழுவின் தேவை தற்போதும் காணப்படுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக தேவை உள்ள உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் அரசாங்கத்தின் உள்ளூர் உற்பத்தியாளர்களை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை அவதானிக்க வேண்டியது அவசியமானது எனவும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் நிவாரணங்கள் கிராமிய மட்டத்திற்கு முறையாக பகிர்ந்தளிக்கப்படுகின்றதா என்பதை கண்காணிக்க அவசர நடவடிக்கை தேவை எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, சிரேஷ்ட உதவி செயலாளர் நளினி கொஹொவல, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பீ.எம்.பீ.அனுரகுமார, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் துறையின் பணிப்பாளர் நாயகம் கே.ஏ.விமலேந்திராஜா, நிதிக் கொள்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கபில சேனாநாயக்க, இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளர் கலாநிதி அனில் பெரேரோ, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே, கொள்கை கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி துஷ்னி வீரகோன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








