
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் நேற்று (18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
இதன்படி 92 லீற்றர் பெற்றோலின் விலை 84 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 338 ரூபாவாகும்.
மேலும் 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, இதன் புதிய விலை 373 ரூபாய்.
ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 289 ரூபாவாகும்.
மேலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 329 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலையும் அதிகரிக்கப்பட்டது.
இதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை மற்றும் இலங்கை ஐ.ஓ.சி எரிபொருள் விலை சம நிலையை எட்டியுள்ளது.
இதேவேளை, எரிபொருள் விநியோகத்திற்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனினும் டீசல், பெட்ரோல் விலை உயர்வு, காஸ் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் இன்றும் பல பகுதிகளில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை காரணமாக சில எரிவாயு நிலையங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
திறந்திருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றது.
எரிபொருள் தட்டுப்பாட்டால் பஸ் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதை நிறுத்திவிட்டதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது.
இருப்பினும், வணிக நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளது.
இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வருடாந்த பஸ் கட்டண திருத்தத்துடன் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படலாம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





