போர்க்களமான ரம்புக்கனை! ஊரடங்கும் அமுல்

கேகாலை ரம்புக்கனை பொலிஸ் பிரிக்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு மறுஅறிவிக்கப்படும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து ரம்புக்கனையில் இன்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ரயில் மார்க்கத்துக்கும் தடை ஏற்படுத்தப்பட்டுள்ள போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தன.

அத்துடன் எரிபொருள் பவுஸர் ஒன்றையும் மக்கள் தடுத்து நிறுத்தினர்.

போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்திய போதும் மக்கள் கலைந்து செல்லவில்லை.

இதனையடுத்து நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. போராட்டக்காரர்களும் கல்வீச்சுத் தாக்குதலை தொடுக்க ரம்புக்கனை பகுதி பெரும் போர்க்களமாக உருமாறியுள்ளது.

இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இதில் 11 பேர் வரையில் காயமடைந்ததுடன் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.
மேலும் அங்கு விசேட அதிரப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கையில்
போராட்டக்காரர்களால் முச்சக்கரவண்டி ஒன்று கொளுத்தப்பட்டது. சொத்துக்களும் சேதம் விளைவித்தனர். போராட்டக்காரர்கள்லைந்து செல்லாது பொலிஸார் மீது கல்வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் பொலிஸாரும் காயமடைந்துள்ளனர். ரம்புக்கனை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது. – என்றார்.

Leave a Reply