ரம்புக்கன சம்பவம் – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், ரம்புக்கனை பொலிஸ் அத்தியட்சர், ரம்புக்கனை பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கேகாலை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் கேகாலை பொலிஸ் பிரிவின் பல உயர் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (19) ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை கலைக்க முற்பட்ட பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

கேகாலை மற்றும் ரம்புக்கன பொலிஸ் பிரிவைச் சேர்ந்த மூன்று உயர் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

கேகாலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அத்தியட்சகர் (SP) மற்றும் பொறுப்பதிகாரி (OIC) ஆகியோர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மூன்று நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு (டிஐஜி) உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply