(க.விஜயரெத்தினம்)மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் டி.சிவராமின்(தராக்கி) நினைவு தினத்தினை முன்னிட்டு எதிர்வரும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வும்,கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.எதிர்வரும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30மணியளவில் மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டு அதனை தொடர்ந்து கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டியும்,நாட்டில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையினை கண்டித்தும் தமிழ் மக்களின் உரிமையினை அங்கிகரிக்ககோரியும் ,இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இந்த நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து ஊடகவியலாளர்களையும்,பொது அமைப்புகளையும், அரசியல்வாதிகளையும்,மனித உரிமை செயற்பாட்டாளர்களையும், கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் என்பன சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மறைந்த ஊடகவியலாளர் நாட்டில் நடைபெற்ற யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புக்கள்,இராணுவ முன்னாயர்த்த நகர்வுகள்,வடகிழக்கின் இராணுவ பிரசன்னம்,தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும்,கொடுமைகளையும் துல்லியமாக துப்பறிந்தும், உண்மையாகவும் தகவல்களை கோர்ப்புச் செய்து செய்திகளாகவும்,கட்டுரைகளாகவும் பேனாமுனையில் எழுதி,எழுத்துலகில் தடம்பதித்த ஊடகப்போராளியாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இவருடன் இந்த நாட்டில் 44 மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கூலிப்படைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் நாடறிந்த உண்மையாகும்.இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு இதுவரையும் இலங்கை அரசாங்கத்தால் தீர்வுகள் எட்டப்படவில்லை.மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் கடந்த 2005.4.29ஆம் திகதி பாதுகாப்புமிக்க கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பது நாடறிந்த,உலகமறிந்த உண்மையாகும்.






