பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 173 சிறைக்கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர் என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், குருவிட்டை, மஹர, நீர்கொழும்பு, வாரியபொல, போகம்பறை, அநுராதபுரம், களுத்துறை, கொழும்பு – மகசீன், தல்தென, வட்டரெக, பதுளை, மாத்தறை, அங்குணகொலபெலஸ்ஸ, பொலனறுவை, கேகாலை, மட்டக்களப்பு, மொனராகலை, பல்லன்சேன, வவுனியா, யாழ்ப்பாணம், காலி, பல்லேகல, திருகோணமலை மற்றும் வீரவில ஆகிய சிறைச்சாலைகளின் கைதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, அபராதம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக 141 கைதிகளும், 14 நாட்கள் குறைக்கப்பட்டதால் 32 கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து 6 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில், சிறு குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் அபராதம் செலுத்தாது சிறை தண்டனை பெற்று வந்த கைதிகள் 6 பேர் வவுனியா சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட நபரொருவருக்கு பிறிதொரு வழக்கும் இருந்தமையினால் அவர் மீண்டும் விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் ந.பிரபாகரன், சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் சந்திரசிறி மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த 6 பேரையும் விடுவித்ததுடன், எதிர்காலத்தில் குற்றங்கள் செய்யாது சமூகத்தில் நற் பிரஜைகளாக வாழ வேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 4 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகரவின் வழிகாட்டலில் பிரதம ஜெயிலர் ஆர்.மோகன்ராஜ் முன்னிலையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்