
வவுனியா-பூவரசங்குளம் பகுதியில் பெண்ணொருவரைக் கடத்தி 5 லட்சம் ரூபா கப்பம் கோரிய நான்கு சந்தேகநபர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வாரியகுத்தூர் பகுதியில் நேற்றுமுன்தினம் குறித்த பெண்ணைக் கடத்தியுள்ளனர். கடத்தப்பட்ட பெண்ணின் மகளிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு அவரை விடுவிக்க 5 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளனர். கப்பம் கொடுக்காவிட்டால் பெண்ணைச் சுட்டுக் கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த பெண்ணின் மகள் பொலிஸாருக்கு முறையிட்டார். அதனையடுத்து சந்தேகநபர்களை வலைவீசிய பொலிஸார் பணம் கொடுக்கும் விதத்தில் அவர்களை அழைத்து கைது செய்தனர். அத்தோடு கடத்தப்பட்ட பெண்ணையும் மீட்டு பொலிஸ் காவலில் வைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 49 வயதுடைய வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.