மக்கள் குரலுக்கு செவிசாய்க்குக! எம்.பிக்களை வலியுறுத்தி ஒரு இலட்சம் கையெழுத்து

சுமார் ஓரு இலட்சம் பேரின் கையெழுத்துடன் மக்களின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கோரும் கையெழுத்துச் சேகரிப்பு இடம்பெற்று வருகின்றது என அதன் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு கோரும் அந்தக் கோரிக்கை மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இலங்கை மக்களின் சமூக அரசியல் பொருளாதார வாழ்வு முற்றாக செயலிழந்து ஓர் அவல நிலைக்குள் நாம் தள்ளப்பட்டுள்ளோம். கடந்த இரண்டு வருடங்களாக நிலவிய ஊழல் முற்றிலும் தவறான முகாமைத்துவம் மற்றும் எதேச்சதிகாரமான ஆட்சி முறைமை என்பனவே நாட்டை இந்தளவு வங்குரோத்து நிலைமைக்குத் தள்ளியுள்ளன. இது உயிர், உடமை அழிவுகள், மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத துன்பத்துக்கு வழிவகுத்துள்ளதோடு சமூக மற்றும் அரசியல் நெருக்கடியையும் தோற்றுவித்துள்ளது.

கோட்டபாய ராஜபக்சவுடன் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து ஆட்சியை முன்கொண்டு செல்ல வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஒருபோதும் கோரவில்லை என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

இந்தச் சூழ்நிலையில் இலங்கை மக்களால் தமது பிரிதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்பட்ட அரச மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்வரும் விடயங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று இதன் கீழ்க் கையொப்பமிடும் இலங்கை மக்களாகிய நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதன் மூலமே அரச முறைமையில் முறைசார் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதைக் கவனத்தில்கொள்ளல் வேண்டும்.

ஜனாதிபதி கோட்டபாய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமை வகிக்கும் தற்போதைய அரசு நாடு தற்போது அனுபவிக்கும் வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச் சென்ற ஒரு தோல்வியடைந்த அரசு என ஏற்றுக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த அரசைப் பதவியில் நீடிக்கும் எந்தவித ஆதரைவயும் வழங்கக்கூடாது.

இந்தக் கோரிக்கையை முன்கொண்டு செல்லும் வகையில் முன்னெடுத்துள்ள மக்கள் தலைமையிலான எந்தவொரு போராட்டத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரிபுபடுத்த முயற்சி மேற்கொள்ளக்கூடாது.

தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க அனைத்துக் கட்சி அரசு ஒன்றை உருவாக்க வேண்டும். அத்தோடு அடுத்த தேர்தலுக்கான காலவரையறையை அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதும் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறும் வகையில் காணப்படும் பிரதம மந்திரியின் தலைமையில் அமைச்சரவைக்கு ஆட்சி அதிகாரம் வழங்கும் 21ஆவது சீர்திருத்தச் சட்டம் தேவையான எந்தவொரு திருத்தத்துடனும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது அத்திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும்” – என்றுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *