உலக வல்லரசுகளோடு போட்டி போடும் அளவிற்கு வளர்ச்சி பெற்று வரும் இந்திய பாதுகாப்புத் துறையின் அபிவிருத்தியில் தற்போது புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஆலோசனையின் கீழ், ‘அக்னிபாத்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேற்படி திட்டத்தின் மூலம் தற்போதுள்ள இராணுவத்தின் மேலதிக அழுத்தங்களை குறைக்க முடியும் எனவும், இந்த திட்டம் நிரந்தரமான ஒரு திட்டமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங், “இத்திட்டம் இந்திய பாதுகாப்பு இராணுவத்தின் புதிய பரிணாமம் என்று சொல்லக் கூடிய வகையில் அமையப் பெற்றிருக்கின்றது.
தற்போதுள்ள பாதுகாப்பு படைகளின் மேலதிக சுமைகளை இலகுவாக்கும் எண்ணத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இத்திட்டமானது இந்திய இராணுவத்தை பலப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய இராணுவத்தின் மொத்த எண்ணிக்கையை பதின்மூன்று லட்சமாக வைத்திருக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுவதால் இத்திட்டம் அதற்கு கைகொடுக்கும் என நாம் நம்புகின்றோம்.
அத்துடன் இவர்களின் பங்களிப்பு முப்படைகளிலும் காணப்படும். இவர்களுக்கான ஆரம்பகால பயிற்சிகள் ஆறு மாதங்களை கொண்டமைவதுடன் பின்னர், நான்கு வருடங்கள் கட்டாய பணியாக இருக்கும். அதன் பின்னர் இருபத்திஐந்து வீதமானவர்களை தெரிவு செய்து அவர்களை நிரந்தரமான இராணுவ வீரர்களாக இந்திய இராணுவத்தில் இணைத்துக் கொள்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
இத்திட்டத்தில் இணைபவர்களுக்கு முப்பதினாயிரம் தொடக்கம் ஐம்பதினாயிரம் வரை மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் ஆட்சேர்ப்பு பணிகள் தொன்னூறு நாட்களை கொண்டதாக இந்த மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.