பயங்கரவாதி சஹ்ரானின் மனைவிக்கு எதிரான வழக்கு செப்.30 வரை ஒத்திவைப்பு!

ஈஸ்டர் தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணையின் போது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பாக ஆட்சேபனை பொலிஸாரினால் எழுப்பப்பட்ட நிலையில் எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு நேற்று வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது பிரதிவாதி சஹ்ரானின் மனைவி சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ரூஸ்தி ஹபீப் முஹமட் அக்ரம் உட்பட சட்டத்தரணி சலாகுதீன் சப்றீன் மூவரும் ஆஜராகி இருந்தனர்.

விசாரணையின் போது மன்றில் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் சஹ்ரானின் மனைவியினால் ஏற்கனவே வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல்வாக்குமூலம் தொடர்பாக ஆட்சேபனை எழுப்பப்பட்டிருந்தது.

மேலும் சஹ்ரான் மற்றும் தப்பி சென்றதாக கூறப்புடும் புலஸ்தினியின் உறவு தொடர்பாக மன்றில் மறைத்தமைக்காக சஹ்ரானின் மனைவிற்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன் குற்றப்புலனாய்வு பிரிவானது சஹ்ரானின் மனைவியிடம் 4 வாக்கு மூலங்களை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நான்கு வாக்குமூலங்களும் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக கேள்விகளை பொலிஸார் மன்றில் எழுப்பியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 திகதிக்கு குறித்த வழக்கு விசாரணை மறுதவணைக்கு திகதியிடப்பட்டுள்ளது.

சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

அத்தோடு, கடந்த கால வழக்கு தவணைகளின் போது குற்றப்பத்திரத்தின் இணைப்பு ஆவணங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் அவை தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்படல் வேண்டும் எனவும் அப்போதே பிரதிவாதிக்கு தன் பக்க நியாயங்களை முன்வைக்க முடியுமாக இருக்கும் எனவும் ஹாதியாவின் சட்டத்தரணி சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கிணங்க, பிரதிவாதியான சஹ்ரானின் மனைவிற்கு எதிரான குற்றப்பத்திரத்தின் இணைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பானது, வழக்கு விசாரணையின்போது அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரனால் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியிடம் கையளிக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *