உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டி ஒலிம்பிக் வருகிற 23ஆம் திகதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்குகிறது.
இதற்கிடையே டோக்கியோவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் இருந்து முன்னணி வீரர்-வீராங்கனைகள் விலகி உள்ளனர். காயம் மற்றும் ஓய்வு காரணமாக பெடரர், நடால், டொமினிக் திம் ஆகிய வீரர்களும், செரீனா வில்லியம்ஸ், ஹாலெப், கெர்பா, அசரெங்கா ஆகிய வீராங்கனைகளும் விலகி உள்ளனர்.
இந்த நிலையில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா) தான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பேன் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் விம்பிள்டன் பட்டத்தை வென்ற ஜோகோவிச் கூறும்போது, ஒலிம்பிக்கில் தான் பங்கேற்பது 50 சதவீதம்தான் சாத்தியம் என்று அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க டோக்கியோவுக்கு செல்கிறேன் என்று ஜோகோவிச் நேற்று உறுதிபடுத்தி உள்ளார்.
ஜோகோவிச் இந்த ஆண்டு இதுவரை நடந்துள்ள கிராண்ட்சிலாம் போட்டிகளான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை வென்றுள்ளார். அமெரிக்கா ஓபன் செம்டம்பரில் நடக்கிறது.
ஜோகோவிச் ஒலிம்பிக்கில் தங்கமும், அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றால் ஒரே ஆண்டில் நான்கு கிராண்சிலாம் பட்டங்கள் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் டென்னிஸ் வீரர் என்ற சாதனையை படைப்பார்.
இந்த சாதனையை ஜெர்மனி வீரங்கனை ஸ்டெபிகிராப் (1988-ம் ஆண்டு) நிகழ்த்தி உள்ளார்.