கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை வேடிக்கை பார்க்க சென்ற 40 பேர் விழுந்த விபரீதம்

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை மீட்கும் போராட்டத்தின்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் தண்ணீரில் விழுந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது விடிஷா மாவட்டம் , இங்குள்ள ஒரு கிராமத்தில் நேற்று மாலை 8வயது சிறுமி கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென சிறுமி கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து சிறுமியை மீட்க மீட்பு படை விரைந்து வந்தது. அதற்குள் கிணற்றைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடியது. கிராமம் முழுக்க பரவிய தகவலால் அவர்கள் அனைவரும் கிணற்றின் சுவரை சுற்றி நின்று கொண்டு வேடிக்கை பார்த்தனர்.

அப்போது கிணற்றின் ஒரே சுவரில் 40க்கும் மேற்பட்டோர் சாய்ந்து நின்று கொண்டிருந்ததால் அது திடீரென சரிந்தது. இதனால் சுமார் 40 பேர் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். 40 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் ஏராளமானோர் விழுந்து உயிருக்கு போராடினர். அவர்களை மீட்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

தகவலறிந்த மாநில பேரிடர் மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர். 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மற்ற அனைவரையும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்தவரும் மத்தியப் பிரதேச கல்வி அமைச்சருமான விஸ்வாஸ் சரங் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு வருகிறார். மீட்புப் பணிகள் குறித்த தகவல்களை முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கேட்டறிந்து வருகிறார்.

Leave a Reply