பயணத் தடை விதிக்கப்படாத நாடுகளில் இருந்து இரண்டு டோஸ் கொவிட் தடுப்பூசியைப் பெற்று இலங்கைக்கு வருபவர்கள் முதல் பிசிஆர் பரிசோதனை மூலம் கொவிட் நோயால் பாதிக்கப்படாவிட்டால் 7 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபுல் தர்மதாச குறிப்பிட்டுள்ளார்.
புதிய வழிகாட்டுதல்களின் படி, பயணத் தடை இல்லாத நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்கள் முதல் பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாவிட்டால் தனிமைப்படுத்தப்படாமல் நாட்டிற்குள் பிரவேசிக்க வாய்ப்பு கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், 2 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 7 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா, தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கான பயணத் தடை நடைமுறையில் உள்ள நிலையில் வியட்நாம் மீதான தடை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இலங்கையர்கள் அரசாங்கத்தின் அனுமதியுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முடியும் என்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மையத்தில் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில்: