பிரேசில் ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி

பிரேசில் நாட்டின் ஜனாதிபதியாக 2019 ஜனவரி 1-ந் திகதி முதல் பதவி வகிப்பவர், ஜெயிர் போல்சொனரோ (வயது 66) ஆவார்.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது அவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் இருந்து அவரது உடல்நிலை குறித்து கவலைகள் எழுந்து வந்தன.

அப்போது அவரது உடலில் இருந்து 40 சதவீத ரத்தம் வெளியேறியது. அதைத் தொடர்ந்து அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த தொற்றை அவர் கையாளும் விதம் அங்கு பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

இதனால் அவருக்கு எதிராக கடுமையான அழுத்தங்கள் ஏற்பட்டு வந்தன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் கூட தடுப்பூசிகள் கொள்முதலில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறி பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினர்.
கடந்த மாதம் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து விட்டது. ஜனாதிபதி ஜெயிர் போல்சொனரோவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டார்.

இந்த நிலையில், ஜனாதிபதி ஜெயிர் போல்சொனரோ கடந்த 10 நாட்களாக தொடர் விக்கலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் காலையில் இவர் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள ஆயுதப்படைகள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு முதல் கட்ட பரிசோதனைகள், சிகிச்சைகள் செய்யப்பட்டன. அவர் 24 முதல் 48 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஆஸ்பத்திரி படுக்கையில் படுத்திருக்கும் படத்துடன் டுவிட்டரில் பதிவிட்ட ஜெயிர் போல்சொனரோ, “கடவுள் விருப்பப்படி விரைவில் திரும்ப வருவேன்” என குறிப்பிட்டிருந்தார்.

இரவில் ஜெயிர் போல்சொனரோ, சாவ் பாவ்லோ நகரில் உள்ள நோவாஸ்டார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அந்த ஆஸ்பத்திரியிலும் அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவரது குடலில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

ஆனால் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்படாது என தெரிவிக்கப்பட்டது. பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ திடீரென ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருப்பது சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply