மட்டக்களப்பில் சத்துருக்கொண்டான் படுகொலை 32வது ஆண்டு நினைவு தினம்!

சத்துருக்கொண்டான் படுகொலை 32வது ஆண்டு நினைவு தினம் இன்று மாலை மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.

இதன்போது, நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவரான அருட்பணி கே.ஜெகதாஸ் மற்றும் ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி,மாநகரசபை உறுப்பினர்களான ரகுநாதன்,கௌரி,சிவம்பாக்கியநாதன் உட்பட படுகொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி இராணுவத்தினருடன் இணைந்து, ஊர்காவல் படையினரால் சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கர்பிணித் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள், அங்கவீனம் அடைந்தவர்கள் என பலர் கொண்டுசெல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 186 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

குறித்த படுகொலை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றபோதும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித தண்டனைகளும் வழங்கப்படவில்லை என இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *