சிறைச்சாலைக்குச் சென்று தமிதா அபேரத்னவை சந்தித்தார் சஜித்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்னவின் சுகத்தை காண்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (திங்கட்கிழமை) காலை மெகசின் சிறைச்சாலைக்குச் சென்றார்.

சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பொது மக்களின் போராட்டத்தை முன்னெடுத்த தமிதா அபேரத்ன போன்றவர்களை தற்போதைய அரசாங்கம் வேட்டையாடுவதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இன்று இளைஞர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். போராட்டத் தலைவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். சிவில் சமூகம் வேட்டையாடப்படுகிறது. இது ஜனநாயக நாட்டில் நடக்கக்கூடாத ஒன்று.

ஜனாதிபதி தலைமையிலான அரசை வலியுறுத்துகிறோம். குறிப்பாக தமிதா அபேரத்னவி்கு விரைவான விடுதலையை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

தயவு செய்து இந்த வேட்டையை நிறுத்துங்கள். இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு பதிலாக அவர்களை பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

குறிப்பாக இந்த நேரத்தில் தமிதா அபேரத்னவுடன் இணைந்து நிற்கின்றோம். அவரது விடுதலைக்காக நாங்கள் நிற்கின்றோம். அந்த விடுதலையை அடைவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *