
ஃபோர்ட் ஃப்ளோட்டிங் மால் பகுதியை மையமாக கொண்டு போராட்டக்காரர்களுக்கு புதிய வடிவமைப்புகளை உருவாக்க புதிய ஆக்கப்பூர்வ வளாகம் அமைக்கப்படும் என ஜனாதிபதி அலுவலகப் பிரதம அதிகாரி சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
இளைஞர் சமூகம் மற்றும் அரச நிறுவனங்களின் உதவியுடன் இந்த வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டார்.
கலை, இலக்கியம், தகவல் தொழிநுட்பம், இலவச சந்திப்பு, கருத்துப் பரிமாற்றம், கலந்துரையாடல் போன்றவற்றுக்கான வசதிகள் இந்த வளாகத்தில் ஏற்படுத்தப்படும்.
மேலும், கலைக் கண்காட்சிகள், இசை விழாக்கள் நடத்தக்கூடிய இடங்கள் மற்றும் உணவகங்கள் இங்கு நிர்மாணிக்கப்படும்.
இளைஞர்களின் திறமைக்கு பொருளாதார பெறுமதி கிடைக்கும் இடமாக இந்த வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவித்த ரத்நாயக்க, அது தொடர்பான சேவை வசதிகளை அரசாங்கம் வழங்கும் எனவும் தெரிவித்தார்.
இப்போராட்டத்தில் ஈடுபடும் பெரும்பான்மையான இளைஞர்கள் புதிய சிந்தனைகளைக் கொண்ட புத்தாக்கம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்கள் இங்கு தமது திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும்.
இளைஞர்கள் குழுவொன்று முப்பரிமாண தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜனாதிபதி செயலக கட்டிடத்திற்கு தமது எதிர்ப்பை செலுத்தி புதிய எதிர்ப்புக் கருத்தைக் கட்டியெழுப்பியதை சாகல ரத்நாயக்க இதன்போது நினைவு கூர்ந்தார்.
உலகின் பல நாடுகளில் இவ்வாறான இடங்கள் இருப்பதாகவும், அவற்றைப் பார்வையிட அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும் தெரிவித்த ஐ.தே.க தேசிய அமைப்பாளர், மிதக்கும் வர்த்தக வளாகமும் அவ்வாறான இடமாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிர்மாணங்கள் தொடர்பான திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விரைவில் கையளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் குழு ஒன்று கொழும்பில் கூடிய போது சாகல ரத்நாயக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இந்தத் திட்டம் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் குழுவொன்று ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் தமது விருப்பத்தை வெளிப்படுத்தியதாக சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்