இந்திய இழுவைப் படகுகள் எமது கடற்பகுதியில் தொழில் செய்ய அரசு மறைமுக ஆதரவு?

இந்திய இழுவைப் படகுகள் எமது கரையை அண்மித்த பகுதிகளில் வந்து மிகவும் சுதந்திரமாக எமது வாழ்வாதாரத்தை வாரி அள்ளிச் செல்வதோடு வளங்களையும் அழித்து விட்டுச் செல்கின்றனர். எந்த தடைகளோ, எதிர்ப்போ இல்லாமல் இந்திய இழுவைப் படகுகள் எமது கரையை அண்மித்த பகுதிகளில் தொழில் செய்வதற்கு எமது அரசு, மறைமுக ஆதரவு வழங்குகிறதோ என சந்தேகம் எழுகின்றது என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்,

நம் நாட்டில் எழுந்துள்ள பொருளாதாரப் பிரச்சினைக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பாக உள்ளது. தற்பொழுது பொருளாதாரப் பிரச்சினை, அரசியற் பிரச்சினையாக மாற்றமடைந்துள்ளது.

இதன் விளைவாக பொதுமக்களும், தொழிலாளர்களும், மாணவர்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வீதிக்கு வந்துள்ளனர்.

அகிம்சை வழியிலே அரசிடம் சில கோரிக்கைகளையும், வேண்டுகோளையும் முன்வைத்து போராடி வருகின்றனர்.

அவர்களின் போராட்டங்களை முடக்குவதும், போராட்டக்காரர் மீது தண்ணீர் தாரை விசுறுவதும், கண்ணீர்ப் புகைக் குண்டை வீசுவதும், தடியடி நடாத்துவதும், நியாயமற்ற முறையிலே கைது செய்து சிறையில் அடைப்பதும், அரசாங்கம் செய்கின்ற மிலேச்சத்தனமான காரியமாகும்.

இச்செயற்பாடு அரசாங்கத்தினதும், அரச தலைவரினதும் சர்வாதிகாரத்தையே வெளிப்படுத்தி நிற்கின்றது. நாம் காட்டுமிராண்டித்தனமான இந்த செயற்பாடுகளை கண்டிக்கிறோம்.

இந்த நாட்டிலே சனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது, எனவே அரசாங்கம் சனநாயகத்திற்கு புறம்பான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தி செய்யப்பட்ட போராட்டக்காரர்களை அவர்களின் அகிம்சை விடுவித்து கோரிக்கைகளையும், வேண்டுகோளையும் நிறைவேற்ற முன்வர வேண்டும்.

குறிப்பாக விலைவாசி ஏற்றம், எரிபொருள் விலையேற்றம் போன்ற தட்டுப்பாட்டினால் தொழிலாளர்களோ மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்த வகையிலே மீனவர் மற்றும் விவசாயிகள், எரிபொருள் விலை ஏற்றத்தினாலும், போதியளவு உரிய நேரத்தில் எரிபொருள் முடியாத இக்கட்டான நிலைக்குத் கிடைக்காததினாலும் தள்ளப்பட்டுள்ளனர்.

பெரும் தோட்டத்துறையிலே உள்ளவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதாக அரசும், சந்தர்ப்ப அரசியல்வாதிகளும் கூறி வந்தாலும் 10 வீதமான தேவைகளைக் கூட நிறைவேற்றியதாக தெரியவில்லை. இது காலம் காலமாக பெருந்தோட்ட துறையினரை ஏமாற்றுவதற்காக கூறும் வாய்மொழியே தவிர வேறு ஒன்றும் இல்லை.

மண்ணெண்ணை போதியளவு கிடைக்காததினால் மீனவர்கள் இடங்களுக்கு செல்ல முடியாத நிலை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய இழுவைப் படகுகள் எமது கரையை அண்மித்த பகுதிகளில் வந்து மிகவும் சுதந்திரமாக எமது வாழ்வாதாரத்தை வாரி அள்ளிச் செல்வதோடு வளங்களையும் அழித்து விட்டுச் செல்கின்றனர்.

எந்த தடைகளோ, எதிர்ப்போ இல்லாமல் இந்திய இழுவைப் படகுகள் எமது கரையை அண்மித்த பகுதிகளில் தொழில் செய்வதற்கு எமது அரசு, மறைமுக ஆதரவு வழங்குகிறதோ என சந்தேகம் எழுகின்றது.

அரசினால் ஏற்படுத்தப்படுகின்ற மண்ணெண்ணெய் தட்டுப்பாடும் – இதற்கு ஒரு காரணமாக அமைகின்றது.

விவசாயிகள் மண்ணெண்ணை மற்றும் உரத்தினை பெரும்போகம் மற்றும் சிறுபோகப் பயிர்ச் செய்கைக்கு உரிய நேரத்தில் தேவைக்கேற்ப வழங்காததினால் நெற்செய்கை வீழ்ச்சியடைந்து வருகின்றது.

இதனால் அரிசி விலை விசம் போல் ஏறி வருகின்றது. அத்தோடு மரக்கறி வகைகளும் பயிரிட முடியாத நிலை. இந்த விழ்ச்சியின் காரணமாக மக்கள் அரை வயிற்றுக் கஞ்சி குடிப்பதற்கு வழியின்றி தவிக்கின்றனர்.

தலைமைத்துவ பெண்கள் தலைமை தாங்குகின்ற குடும்பங்கள் வாழ்க்கையை முன்னெடுத்து செல்ல முடியாமல் அல்லாடுகின்றனர்.

அவர்களின் வாழ்வாதாரம் உயர, அவர்களின் இல்லாமையை குறைப்பதற்காக சில உதவிகள் செய்வதாகக் கூறிவந்தாலும், அந்த உதவிகள் எங்கே? எப்போ? எந்த வகையிலே வழங்கப்படுகிறது என்ற வெளிப்படைத்தன்மை காணப்படவில்லை.

எனவே இந்த சந்தர்ப்பத்தில் அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

1.காலி முகத்திடலிலும், வீதிகளிலும் அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும்.

2.கைது செய்யப்பட்ட சனநாயகப் போராட்டக்காரர்கள் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

3.எல்லை தாண்டுகின்ற இந்திய இழுவைப் படகுகளை தீவிரமாக கைது செய்யவேண்டும்.

4.உள்ளுரிலே இழுவை மடித்தொழிலை இல்லாதொழிக்க வேண்டும்.

5.மண்ணெண்ணை விலையை குறைக்க வேண்டும், அல்லது மீனவர் மற்றும் விவசாயிகளுக்கு மானிய முறையில் போதியளவு மண்ணெண்ணை வழங்க வேண்டும்.

6.தேவைக்கேற்ப விவசாயிகளுக்கு உரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

7.பெரும் தோட்டத் தொழிலாளர்களின் வறுமை மற்றும் வாழ்வாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

8.பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றதாக கூறப்படுகின்ற வாழ்வாதார உதவிகளின் வெளிப்படைத் தன்மைகளை தெரியப்படுத்த வேண்டும்.-என்றுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *