வரலாற்று நாயகன் தியாகி திலீபனின் நினைவேந்தலை நடத்துவது யார்?
கட்சிகளிடையே நேற்று நல்லுரில் பிடுங்குப்பாடு
தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர் மக்கள் கோரி
க்கை
பன்னிரு கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், நினைவு தினத்தைக் கடைப்பிடிப்பது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு அருகே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்களுக்கும், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் சார்புடையோருக்கும் இடையிலே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் முரண்பட்டு, தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் ஒரு தரப்பை மற்றைய தரப்பை ஒளிப்படங்கள், காணொலிகள் எடுத்துக் கொண்டது என்றும், வேறு சில குழுக்களும் அங்கு வந்து தர்க்கத்தில் ஈடுபட்டன என்றும் அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், மணிவண்ணன் சார்பு அணியினரும் அந்த இடத்தில் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இதுவே இரு தரப்புகளுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனிடம் கேட்டபோது, “தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் கடந்த சில ஆண்டுகளாக நாமே நினைவேந்தலை நடத்தி வருகின்றோம். இம்முறையும் அங்கு நினைவேந்தல் நடத்துவதற்கான கொட்டகையை அமைத்துள்ளோம். அங்கு வந்த மணிவண்ணன் சார்புடையவர்கள், அந்த இடத்தில் கொட்டகை அமைக்க வேண்டாம் என்று தடுக்க முயன்றனர். அந்த தாங்கள் நினைவேந்தல் நடத்தப் போகின்றோம் என்று முரண்பட்டனர்.
பொலிஸார் மற்றும் இராணுவக் கெடுபிடிகளால் கடந்த சில ஆண்டுகளாக யாரும் நினைவேந்தலை நடத்த முன்வரவில்லை. நாமே நினைவேந்தலை நடத்தியிருந்தோம். கடந்த ஆண்டு அதற்காகக் கைதும் செய்யப்பட்டோம். இவ்வாறு இருக்கையில் திடீரென வந்தவர்கள் நாம் வழமையாக நினைவேந்தல் செய்யும் இடத்தில் நினைவேந்தல் செய்வதைத் தடுப்பது முறையற்றது “என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபனிடம் கேட்டபோது, “நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் திலீபனின் நிரந்தர உருவப் படத்தை அமைத்து அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த இடத்தில் கொட்டகை அமைத்ததாலேயே முரண்பாடுகள் ஏற்பட்டன” என்று தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்காக பன்னிரு நாள்கள் உணவு தவிர்த்து தனது உயிரை ஈந்த திலீபனின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் நடந்து கொள்கின்றனர் என்று சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் விசனத்துடன் தெரிவித்தனர்.
உணர்வெழுச்சியுடன் நடத்தப்பட்ட வேண்டிய நிகழ்வுகளில் அரசியலைப் புகுத்தி சுயலாபம் தேட அரசியல்வாதிகள் முயலக்கூடாது. இவ்வாறான செயற்பாடுகளை அரசியல் கட்சிகள் தவிர்ததுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.