ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நாவின் 51 வது கூட்டத்தொடர்பின் போது , அதன் இறுதி தீர்மான அறிக்கையில் இலங்கை விவகாரம் தொடர்பில் இலங்கையின் வடமாகாண முஸ்லீம்களின் பிரச்சினைகள் அபிலாசைகளையும் கவனம் செலுத்துமாறு ஜ.நாவின் செயலாலருக்கு கையளிக்கவென மகஜர் ஒன்று ஜ.நாவின் யாழ் பிரதிநிதி காயத்ரியிடம் நேற்றையதினம் UNHCR யாழ் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது .
மக்கள் பணிமனை தவிசாளரும் , வடக்கு முஸ்லீம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாலரும் , மக்கள் மறுமலர்ச்சி முன்னனியின் பிரதித் தலைவருமான அஷ்ஷெய்க் B.A.S சுப்யான் அமைப்பாளர் A.C.M கலீல் ஆகியோரினால் கையளிக்கப்பட்டது .
இம் மகஜரில் ”ஐ.நாவின் செயலாளர் நாயகமாகிய தாங்கள் இலங்கை தொடர்பான காட்டமான அறிக்கையை சென்றவாரம் வெளியிட்டிருந்தீர்கள்.இதில் பல்வேறு விடயங்களை குறிப்பிட்டிருந்தீர்கள் வரவேற்கத்தக்கதாகும் .
இவ் அறிக்கையில் இலங்கையில் இனரீதியாக முஸ்லிம் என்பதற்காக அடையாளப்படுத்தி எவ்வித தவறுகளும் செய்யாத இலங்கை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதினால் பாதிக்கப்பட்டு இன்று வரை சரியான தீர்வுகள் , மறுவாழ்வு இன்றி அவதியுறும் மக்களைப் பற்றியும் கவனம் செலுத்தப்படவில்லையே என்பதே எமது கவலையாகும் .
இச் சந்தர்ப்பதில் மறக்கப்பட்ட சமூகமாக இருக்கும் இலங்கையின் வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் அபிலாஷைகளையும் மீண்டும் தங்களுக்கு சமர்பித்து எம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தாங்கள் இக் கூட்டத் தொடரில் கவனம் செலுத்தி உங்கள் இறுதி அறிக்கையில் உள்வாங்கி சர்வதேசத்தின் கவனத்தை எங்கள் பக்கமும் திருப்ப ஆதரவு தருவதுடன் இலங்கை அரசுக்கும் அழுத்தங்களை பிரயோகிக்குமாறும் தயவாக வேண்டிக் கொள்கின்றோம் .
இலங்கையின் வடமாகாணத்திலிருந்து 1990 ஒக்டோபரில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் , ” முஸ்லிம் ” என இனரீதியாக அடையாளம் காணப்பட்டு ஆயுத முனையில் பலாத்காரமாக இங்கு கால காலமாக சேமித்த அனைத்து அசையும் அசையாத சொத்துக்களை பறிகொடுத்த நிலையில் இரண்டு மணிநேர அவகாசத்தில் இனசுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்பட்டனர் .
இன்று 32 வருடங்கள் ஆகிவிட்டன . இலங்கை நாட்டில் இக்கால கட்டங்களில் உள்நாட்டு யுத்தத்திற்கு தீர்வாக பல பேச்சு வார்த்தைகள் தேசிய சர்வதேச மட்டத்தில் நடந்தேறின . யுத்தமும் முடிவுக்கு வந்தது . மீள்குடியேற்றங்களும் நடந்ததாக இலங்கை ஆட்சியாளர்களும் அறிவித்தனர் .
ஆனால் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை . ஆட்சியாளர்களிடம் மீள்குடியேற்றம் தொடர்பில் ஓர் நிலையான கொள்கை , திட்டமிடல் , தொடர் வேலைத்திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை .
தற்போது இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட சனத்தொகையைக் கொண்டுள்ள இம்மக்கள் ஆதரவற்றவர்களாக ஆக்கப்பட்டுவிட்டனர் . இம்மக்களிடையே இவ் இடைப்பட்ட கால கட்டத்தில் புதிய இரண்டு தலைமுறையினர் உருவாகிவிட்டனர் . தீர்வு என்று வரும் பொழுது இவர்களுக்கும் சேர்த்தே தீர்வு காணப்பட வேண்டும் .
30 ஐ.நா இலங்கை விடயத்தில் முக்கிய தீர்மானமான 1 ( நிலைமாறுகால நீதி மற்றும் பொறுப்புக் கூறல் ) மேற்கொள்ளப்பட்டது . பாராட்டுக்குரியது . எனினும் இத் தீர்மானங்களினால் எவ்வித பலனையும் நன்மையையும் வட இலங்கை முஸ்லிம்கள் அனுபவிக்கவில்லை என்றே கூற வேண்டும் .
எனவே ஐ.நாவின் இக் கூட்டத்தொடரில் இலங்கை வடபுல முஸ்லிம்கள் வட இலங்கையிலிருந்து L.T.T.E யினால் , 1990 இல் வெளியேற்றப்படவிதம் . வெளியேற்றத்தின் பின் இம் மக்களின் இடப்பெயர்வு வாழ்வு , யுத்தமுடிவின் பின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் போன்ற அனைத்து விடயங்களிலும் படுமோசமான மனித உரிமை மீறல்களுக்கு இம்மக்கள் ஆளாகியுள்ளனர் .
தற்போது வடக்கு முஸ்லிம்களுக்குத் தேவையான பொருத்தமான பாதுகாப்பு , தலைமுறையினரும் சொந்த மண்ணில் மீள்குடியேறி வாழ்வதற்கான காணி , இருப்பிடம் , தொழில்வாய்ப்பு மற்றும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் உரிமைகளுடனும் கௌவரத்துடனுமான மீள்குடியேற்றம் , சொத்து இழப்புக்கான நஷ்டஈடு , இவற்றிக்கான சட்ட ரீதியான உத்தரவாதங்கள் ஏற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டுமென்பது தொடர்பாக தங்கள் இறுதித் தீர்மான அறிக்கையில் வலியுறுத்தப்பட வேண்டுமென்பதே இலங்கையின் வடபுல முஸ்லிம்களாகிய எமது எதிர்பார்ப்பாகும் .
இதன் மூலம் எமக்கு நல்லதொரு எதிர்காலம் அமையும் என நம்புகின்றோம் . எமது வேண்டுகோளை நிறைவேற்றிவைக்குமாறு தயவாக வேண்டிக்கொள்கின்றோம் . எனக் குறிப்பிடப்பட்டிருந்தது .
இம் மகஜரினைப் பெற்றுக் கொண்ட யாழ்ப்பாண UN பிரதிநிதி இன்றே கொழும்பு அலுவலகத்தின் மூலம் ஜெனிவாவிற்கு அனுப்பிவைக்கப்படும் என உறுதியளித்தார் .


பிற செய்திகள்