டயானாவுக்கு சாள்ஸ் கண்டனம் தெரிவிப்பு!

அனைத்து கடைகள் மற்றும் களியாட்ட விடுதிகள் 10 மணிக்கு பின்னர் பூட்டப்படுவதால் கொழும்பு நகரம் செயலற்று போய்விடுவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஊடகங்களிடம் நேற்று தெரிவித்திருந்தார்.

மேலும், நேரத்தை செலவிட நகரத்துக்கு வருவோரை இது பாதிப்பதாகவும் நாட்டில் இரவு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்த அவர், மன்னாரை பொழுது போக்கு வலயமாக மாற்றலாம் என்றும் மேலும் சில சர்சை கருத்துகளையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மன்னார் குறித்த அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார், மாவட்டம் தொடர்பாக தரக் குறைவாக பேசுவதற்கு இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எவ்வித அருகதையும் இல்லை என்றும் அவரது கருத்தை கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன், இன்று (14) தெரிவித்தார்.

புதிய இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மன்னார் மாவட்டம் தொடர்பாக கோபத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்தை ஊடகங்கள் மூலம் அவர் தெரிவித்துள்ளதாக, சாள்ஸ் எம்பி குறிப்பிட்டார்.

மன்னார் மாவட்டத்தை ஒரு களியாட்ட இடமாக மாற்றவுள்ளதாகவும் குறிப்பாக தன்னை கருவாடு காய வைப்பதற்கு மன்னாருக்கு அனுப்ப உள்ளதாக சிறு வயதில் தன்னை பயமுறுத்தி வளர்த்ததாகவும் டயானா கமககே வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் எம்.பி தெரிவித்தார்.

மன்னார், மாவட்டம் மிகவும் கலை, கலாசார பண்புகள், கடல் வளம், விவசாய வளம் கொண்டது என்றும் தற்போது கல்வியில் தலை சிறந்து விளங்கி காணப்படுகின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம், மடு திருத்தலம் ஆகிய இரு பழமை வாய்ந்த திருத்தலங்கள் உள்ளன என்றும் மன்னாரின் கலை, கலாசார பண்புகள் தெரியாமல், ஊடகங்கள் முன் அவர் பேசியமை கண்டிக்கத்தக்கது என்று என்றார்.

நாட்டில் கஞ்சா வளர்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கொழும்பை இரவு நேர களியாட்ட வலயமாக மாற்ற வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் டயானா கமகே பேசியதாகவும் சாள்ஸ் எம்.பி சுட்டிக்காட்டினார்.

அவருடைய செயல்பாடுகள் தொடர்ச்சியாக இவ்வாறு இருக்கும் போது அவருக்கு இராஜாங்க அமைச்சு பொறுப்பு வழங்கியமை குறித்து ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *