திருகோணமலை பொது வைத்தியசாலை மற்றும் நகர்புறத்தை அண்டிய கரையோரப் பிரதேசங்களைத் தூய்மையாக பேணுவது தொடர்பான கலந்துரையாடல் இன்று மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் B. H.N. ஜயவிக்ரம தலைமையில் நடைபெற்றது.
திருகோணமலை பொது வைத்தியசாலை அமையப் பெற்றிருக்கும் கரையோரப் பிரதேசத்தில் வைத்தியசாலைக் கழிவுகள் உட்பட கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் அப்பிரதேசத்திற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் பாதிப்புகளுக்கு முகங்கொடுப்பதாக அரசாங்க அதிபருக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டதையடுத்து சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு சபையின் ஒழுங்கமைப்பின் கீழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் இவ்விஷேட கூட்டம் கூட்டப்பட்டது.
திருகோணமலை நகரம் சுற்றுலா நகரமாகக் காணப்படுகின்றது. கரையோரம் சார் பகுதிகளில் கழிவுகளை அப்புறப்படுத்தி துர்நாற்றம் ஏற்படக்கூடிய பிரதேசங்களாக மாற்றியமைப்பதனை விடுத்து தூய்மையானதும் ரம்மியமானதுமான பிரதேசமாக கடற்கரையோரங்களை பேண ஒவ்வொரு பிரஜையும் தமது பங்களிப்பை நல்க வேண்டும்.
பொது வைத்தியசாலை அமையப் பெற்றுள்ள கரையோரம்சார் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் நீராட வருகின்றனர். அப்பிரதேசத்தில் கழிவுகள் வெளியேற்றப்படும்போது சுற்றுலாப் பயணிகளுடைய வருகைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அவர்களுக்கு அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்.
அப்பிரதேசத்தில் பவளப் பாறைகள் காணப்படுவதாகவும் கழிவகற்றல் செயற்பாடு மூலம் பவளப்பாறை பாதிப்பிற்குட்படும். எனவே இது தொடர்பில் நீண்ட கால, நடுத்தர கால, குறுங்கால செயற்றிட்டங்களை வடிவமைத்து உரிய நிறுவனங்கள் செயற்படுமாறு அரசாங்க அதிபர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.
திருகோணமலை, பொது வைத்தியசாலை 11 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. பொது வைத்தியசாலை மூலம் வெளியேற்றப்படும் இரசாயனக்கழிவுகள் உரிய நியமங்களைப் பின்பற்றி அழிக்கப்படுகின்றன. இரசாயனக்கழிவுகள் தன்னுடைய பதவிகாலத்தில் கரையோரத்துக்கு விடுவிக்கப்படவில்லை.
அவ்வாறான சம்பவங்கள் பதிவாகினால் அது தொடர்பாக தன்னை அறிவுறுத்துமாறும் கரையோர சுற்றாடலைப் பேணிப் பாதுகாக்க வைத்தியசாலை அபிவிருத்தி சமூகத்தை இணைத்து செயற்படவிருப்பதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.
அத்துடன் வைத்தியசாலையில் வெளியேற்றப்படும் கழிவுநீரைக் கடலுடன் கலக்கவிடாமல் அவற்றை பவுசர் மூலம் சேகரித்து கன்னியா கழிவகற்றல் பிரதேசத்தில் உரிய முறைப்படி விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக இதன்போது தீர்மானிக்கப்பட்டது. திருகோணமலை நகரசபை இச்செயற்பாட்டை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. அத்துடன் எதிர்வரும் 23ம் திகதி காலை 7:30 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலை சார்ந்த கரையோரப் பிரதேசத்தில் தூய்மைப்படுத்தல் சிரமதானம் மேற்கொள்வதாகவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் J. S. அருள்ராஜ், சமுத்திரச் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையினுடைய வடகிழக்கு உதவி முகாமையாளர் T. ஸ்ரீபதி, திருகோணமலை நகர சபை செயலாளர், உள்ளூராட்சித் திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


பிற செய்திகள்