சீதுவை பொலிஸ் பிரிவில் ஹேத்தேவ சிறி நந்தாராம விகாரையின் விகாராதிபதி கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது இரண்டு வாகனங்களும் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளது. அத்துடன் விகாரையில் தங்கி இருந்த இளவயது பிக்கு ஒருவர் சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியுள்ளார்.
மெதகமுவே மஹானாம என்ற 50 வயதுடையவரே கொலை செய்யப்பட்ட விகாதிபதியாவார்.
கொலைச் சம்பவம் 12ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக விசாரணை போது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
விகாரையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து பிரதேசவாசிகள் இது தொடர்பாக பொலிஸாருக்கு நேற்று அறிவித்துள்ளனர்.
இதனை அடுத்து நேற்று புதன்கிழமை இரவு பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விகாரையின் மேல் மாடியில் விகாராதிபதி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
அத்துடன் விகாராதிபதியின் டிபென்டர் வாகனம் ஒன்றும் வெகன் ரக வாகனம் ஒன்றும் சந்தேக நபர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து செவ்வாய்க்கிழமை அன்று விகாரையில் இருந்த இளவயதுடைய பிக்கு தலைமறைவாகியுள்ளார்.
இதேவேளை, நேற்று இரவு எட்டு மணி அளவில் சம்பவ இடத்திற்கு நீர்கொழும்பு பதில் நீதவான் நெல்சன் குமார நாயக்க வருகை தந்து விசாரணை மேற்கொண்டார்.
சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பிற செய்திகள்