15.09.1987 காலை மணி 8.30! தமிழீழப் போராட்ட வரலாற்றிலே வைரத் தூரிகை கொண்டு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியநாள். ஆம்! தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளரும், தமிழினத்தின் விடிவெள்ளியுமாகிய திலீபன் (இராசையா பார்த்தீபன்) நல்லூர் வடக்கு வீதியிலுள்ள கந்தன் கருணை இல்லத்தில் வாக்கிடோக்கியுடன் நடுவராந்தாவில் அமர்ந்து கொண்டு புன்னகை தவழும் முகத்துடன், நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருக்கிறார்.
சொர்ணம், அன்ரன் மாஸ்டர், கவிஞர் காசி ஆனந்தன் போன்றோர் அங்கு இருக்கின்றார்கள்.
அவரை நோக்கி நடக்கிறேன்… ஹலோ மு.வே.யோ… என்ற இனிய பலாச்சுளைக் குரல் என்னை வரவேற்கிறது. திலீபன் இப்படித்தான் என்னை அழைப்பது வழக்கம். அவரருகே சென்றபோது பக்கத்தில் அமரும்படி என் தோளைக் கட்டியணைத்தவாறு கூறினார். கிட்டு அண்ணாவுக்கே உரிய இந்த பழக்கம் அவர் உருவாக்கிய திலீபனுக்கும் இருந்தது.
யாழ். மாவட்டத்திலுள்ள ஊரெழு என்னும் அழகிய பனைமரங்கள் கொஞ்சி விளையாடும் கிராமத்தில், ஆசிரியர் இராசையா தம்பதிகளின் கடைசி (நாலாவது) மகனாகப் பிறந்த (திலீபன்) பார்த்தீபன் வாழ்வின் ஆரம்பத்திலேயே மிகவும் துர்ப்பாக்கியசாலியாக இருந்துவிட்டான். பத்து மாதம் வரை அன்புப்பால் ஊட்டி, சீராட்டி, பாராட்டி வளர்த்த அன்னையின் அரவணைப்பை பத்தாவது மாத முடிவில் பறிகொடுத்துவிட்டான் திலீபன்.
எத்தனை கொடுமை இது? உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்த பார்த்தீபன், தன் ஆரம்பக்கல்வியை ஊரெழுவிலும், பின்னர் யாழ். இந்துக் கல்லூரியிலும் கற்றான்.
1974ஆம் ஆண்டு தை மாதம் யாழ்.நகரில் நடைபெற்ற 2ஆம் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டான். ஆனால், தமிழினத்தின் துரோகி ஒருவனின் கட்டளையின் மூலம் பத்து அப்பாவித் தமிழர்கள் அவன் கண்முன்னால் கொல்லப்பட்டதைக் கண்டு பார்த்தீபனின் இதயம் துடிதுடித்தது. தமிழன் சுதந்திரமாக வாழவேண்டுமென்ற விடுதலைத்தாகம் அந்தச் சிறுவயதில் (10 வயது) அவன் நெஞ்சில் நெருப்பாகப் பற்றத் தொடங்கியது. 1977ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனக்கல
வரத்தில் யாழ்ப்பாணம் நோக்கிவந்த தமிழ் அகதிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தான். அப்போது அவனுக்கு வயது 13, அந்த இனக்கலவரம் திலீபனின் நெஞ்சில் சுதந்திர தாகத்தை வெகுவாகக் கிளப்பத் தொடங்கியது. அந்த வயதிலேயே விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதல்களை மானசீகமாக மகிழ்ச்சி ததும்ப வரவேற்றான் திலீபன். தமிழ்த்துரோகி துரையப்பா கொலை செய்யப்பட்டபோது ஆனந்தக் கூத்தாடியவன் திலீபன்.
1982ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரம் பத்திரப்பரீட்சையில் (உயர்தரம்) சகல பாடங்களிலும் சிறப்பான சித்திகளைப்பெற்று யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்குத் தெரிவானான். ஆனால், தமிழ் மக்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டது கண்டு அவன் மனம் தவித்தது. தமிழ் மக்களைக் காப்பதற்காக தன் மருத்துவக் கல்வியை உதறித்தள்ளிய திலீபன், விடுதலை இயக்கத்தில் சேர்ந்து தமிழ் மண்ணுக்காகப் போராடத் தீர்மானித்தான்.
தமிழ் மக்களைக் காப்பதற்காக அல்லும் பகலும் போராடிக்கொண்டிருந்த தலைவர் வே.பிரபாகரனுடன் எப்படியாவது இணைய வேண்டுமென்பதே அவனது கனவாகவும் இலட்சியமாகவும் இருந்தது. தலைவர் பிரபாவைத் தன் மானசீகக் குருவாக வரித்துக்கொண்ட பார்த்தீபன் (திலீபன்) 1983ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அங்கத்தனவாக சேர்ந்தான். ஆரம்பத்தில் கப்டன் பண்டிதருடன் இணைந்து பரப்புரை வேலைகளைக் கவனித்துவந்த அவன் பின் மானிப்பாய், வட்டுக்கோட்டைப் பகுதியில் பரப்புரைப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான்.
1983ஆம் ஆண்டின் கடைசிப் பகுதியில் தமிழ்ப்பகுதியில் பரப்புரை வேலைகளில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளுக்கு தலைக்குமேல் ஆபத்து இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த ஆபத்து இராணுவத்திடமிருந்து மட்டுமல்ல வேறு பல வழிகளிலும் இருந்தது. இவைகளிலெல்லாம் எதிர்நீச்சல் போட்டு தன் பணியில் வெற்றி கண்டவன் திலீபன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். பிராந்திய தளபதியாகக் கடமையாற்றிய கிட்டு அண்ணா திலீபனின் செயற்றிறனிலும், அயாராத முயற்சியிலும் நம்பிக்கை வைத்தார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, உறுதி, உழைப்பு எல்லாவற்றிலுமே திறமையாகத் திகழ்ந்த திலீபன் அவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளனாக நியமிக்கும்படி தலைவர் பிரபாவிடம் பரிந்துரை செய்தார் கிட்டு.
திலீபன் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட பின், தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் ஓர் புதிய அத்தியாயம் ஆரம்பமாயிற்று. திலீபன் தமிழ் மக்களை அரசியல் மயப்படுத்துவதற்காக அதற்காக அல்லும் பகலும் உழைத்த அதேவேளை, தளபதி கிட்டுவுடன் இணைந்து பல தாக்குதல் திட்டங்களையும் வகுத்தான். அநேக தாக்குதல்களில் தானே நேரடியாக ஆயுதமேந்திப் போராடினான். வல்வையில் ஏற்பட்ட விடுதலைப் புலிகள்-––இராணுவ நேரடி மோதல் ஒன்றில் வயிற்றில் குண்டு பாய்ந்து சத்திரசிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டான். அப்போது அவனது குடலின் 14 அங்குலம் வெட்டி வீசப்பட்டது. அதையும் தமிழினத்துக்காக ஏற்றுக்கொண்டான். மூன்றுமுறை சத்திரசிகிச்சை செய்யப்பட்ட அவன், மிகவும் பலவீனமடைந்தான். ஆனால், மனஉறுதி மட்டும் தளரவில்லை.
« « « «
காலை 9.30 மணி! பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். ‘வோக்கிடோக்கி’ யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற ‘வானை’ நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்கிறோம். ஆம்! அவரின் தியாகப் பயணம் ஆரம்பமாகி விட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் ஏறுகிறார், வான் நல்லூர்க் கந்தசாமி கோயிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கையசைத்து வழியனுப்புகிறார்கள்.
வான் நின்றதும், பிரதித் தலைவர் மாத்தையா, எதிர்வந்து நின்று, திலீபனைக் கட்டி அணைத்து வரவேற்று, உண்ணாவிரத மேடைக்கு அழைத்துச் செல்கிறார். நாங்களும் பின்னால் போய்க் கொண்டிருக்கிறோம். எதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடக்கிறது. வயதான ஓர் அம்மா ஒளி தவழும் கண்களில் கண்ணீர் மல்க, திலீபனை மறித்து, தன் கையில் சுமந்துவந்த அர்ச்சனைச் சரையிலிருந்து நடுங்கும் விரல் களால் திருநீற்றை எடுத்து திலீபனின் நெற்றியில் பூசுகிறார். தாயற்ற திலீபன் அந்தத் தாயின் பாச உணர்வில் மூழ்கிப்போய் விடுகிறார். காலை 9.45 மணி உண்ணாவிரத மேடையிலே உள்ள நாற்காலியில் திலீபனை அமர வைக்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா.
திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. அங்கு பக்கத்திலிருந்த மேடையில் பிரசாத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. நடேசன், காசி ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணாவிரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது என்பது பற்றி விளக்கமளித்தார்கள். தமிழ் மக்களினதும் தமிழர் தாயகத்தினதும் உரிமைகளைப் பேணும் நோக்கமாக, இந்தியா மக்களினது கவனத்தை ஈர்க்கும் வகையில், தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட ஐந்து கோரிக்கைகளும் பின்வருவன:
- பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
- புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
- இடைக்கால அரசு நிறுவப்படும் வரை ‘புனர்வாழ்வு’ என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
- வடக்கு -– கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர் காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
பிரசாத்தால் மேற்படி ஐந்து கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன.
« « « «
பிற்பகல் 2 மணி! திலீபன் கம்பீரமாக வீற்றிருக்கிறார், யோகியிடம் ‘‘படிப்பதற்குப் புத்தகங்கள் வேண்டும்’’ என்று என் காதுக்குள் குசுகுசுக்கிறார் திலீபன். நான் ராஜனிடம் சொல்கிறேன் பதினைந்து நிமிடங்களில் பல அரிய நூல்கள் மேடைக்கு வருகின்றன.
விடுதலைப் போராட்டங்கள் பற்றி அறிவதில் திலீபனுக்கு மிகுந்த ஆர்வம் எப்போதுமே உண்டு, பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, ஹோசிமின், யாசர் அராபத் போன்றவர்களின் வாழ்க்கையைப் பற்றிய நூல்களை நேரம் கிடைக்கும்போது படிப்பார்.
மாலை 5 மணிக்கு பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்ப மாயிற்று பாடசாலை மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு கவிதைகளை வாசிக்கத் தெடங்கினர். சுசிலா என்ற மாணவி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தன் கவிதையை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் அழுதேவிட்டார் ‘‘அண்ணா திலீபா! இளம் வயதில் உண்ணாமல் தமிழினத்துக்காக…. நீ தவமிருக்கும் கோலத்தைக் காணும் தாய்க்குலத்தின் கண்களில் வடிவது… செந்நீர்!… சுசிலாவின் விம்மல் திலீபனின் கவனத்தைத் திருப்புகிறது. கவிதை தொகுப்பை முடித்துவிட்டு (பலஸ்தீனக் கவிதைகள்), கவிதை மழையில் நனையத் தொடங்கினார். அவர் விழிகளில் முட்டிய நீர்த்தேக்கத்தை ஒருகணம் என் கண்கள் காணத் தவறவில்லை. எத்தனை இளகிய மனம் அவருக்கு?
இந்த இளம் குருத்து இன்னும் எத்தனை நாள்களுக்கு ஒரு சொட்டுநீர் கூட அருந்தாமல் வாடி வதங்கப் போகிறது? அஹிம்சைப் போராட்டத்துக்கே ஆணிவேராகத் திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் கூட தனது உண்ணாவிரதப் போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார்! ஆனால், நம் திலீபன்? உலகத்திலேயே நான் அறிந்தவரையில் இரண்டாவதாக, ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தவர் என்ற பெருமதிப்பை பெறுகிறார்.
அப்படியானால் அந்த முதல் நபர் யார்? அவர் வேறு யாருமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்தான்! 1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் அவர் இருந்தபோது, தகவல் தொடர்புச் சாதனங்களை இந்திய அரசு கைப்பற்றியதைக் கண்டித்து, ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து, உலகில் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்து வைத்த பெருமை அவரையே சாரும்.
இரண்டாம் நாளே இந்திய அரசு பணிந்ததால் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றார். அதுபோல், அவரால் உருவாக்கப்பட்ட திலீபன் இன்று குதித்து விட்டார். அவரது கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றுமானால் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயார். இல்லையென்றால் இறுதி மூச்சுவரை அதைத் தொடரத் தயாராக இருந்தார். இந்த உண்ணாவிரதம் இந்திய அரசின் தலையீட்டால் வெற்றி பெறுமானால் அந்த வெற்றி திலீபனைச் சாரும்.
அதுபோல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இறுதிவரை உண்ணாவிரதம் இருந்தே திலீபன் இறக்க நேரிட்டால் அதில் கிடைக்கும் தோல்வியும் திலீபனுக்கு ஒரு மாபெரும் வெற்றிதான். உலகில் புதிய அத்தியாயம் ஒன்றின் ‘சிருஷ்டி கர்த்தா’ என்ற பெருமை அவனையே சாரும். ஆனால், அதற்காக எங்கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்டுமா? இறைவா! திலீபனைக் காப்பாற்றிவிடு! கூடியிருந்த மக்கள் நல்லூர்க் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக்கொள்கிறார்கள். இதை நான் அவதானிக்கிறேன். பழந்தமிழ் மன்னாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரசதானியிலே அதுவும் தமிழ்க் கடவுளாகிய குமரனின் சந்நிதியில், ஒரு இளம்புலி உண்ணாமல் துவண்டு கிடக்கிறது. ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும், இல்லையேல் உலகில் நீதி செத்துவிடும் எனக்குள் இப்படி எண்ணிக் கொள்கிறேன்.
« « « «
அன்று இரவு பதினொரு மணியளவில் தலைவர் வே.பிரபாகரன் திலீபனைப் பார்ப்பதற்காக மேடைக்கு வருகிறார். அவருடன் சொர்ணம், இம்ரான், அஜித், சங்கர், மாத்தையா, ஜொனி இப்படி பலரும் வருகின்றனர். வெகுநேரம்வரை தலைவருடன் உரையாடிக் கொண்டிருந்தார் திலீபன். யாரையும் அதிகநேரம் பேச அனுமதிக்க வேண்டாம் என்று, போகும்போது என்னிடம் கூறிவிட்டுச் சென்றார் தலைவர், நீர், உணவு உட்கொள்ளாத ஒருவர், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் விரைவில் களைப்படைந்துவிடுவார். அதனால்தான் தலைவர் அப்படிக் கூறிவிட்டுச் சென்றார். அன்றிரவு பத்திரிகைத் துறையைச் சார்ந்தவர்களும் திலீபனைப் பார்க்க மேடைக்கு வந்தனர். ‘முரசொலி’ ஆசிரியர் திருச்செல்வம், ஈழமுரசைச் சேர்ந்த பஷீர் போன்றோருடன் திலீபன் மனம்திறந்து பேசினார். அவரைக் கட்டுப்படுத்த எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதிகம் பேசி உடம்பைக் கெடுத்துக்கொள்ளப் போகிறாரே என்பதால் அவரை அன்பாகக் கடிந்து கொண்டேன். நள்ளிரவு சுமார் 12 மணியளவில் படுக்கைக்குச் சென்றார். அவர் ஆழ்ந்து உறங்கத் தொடங்கியபோது நேரம் 1.30 மணி, அவரின் நாடித்துடிப்பைப் பிடித்து அவதானிக்கிறேன். நாடிதுடிப்பு :88 சுவாசத்துடிப்பு :20 அவர் சுயநினைவுடன் இருக்கும்போது வைத்திய பரிசோதனை செய்வதற்கு அனுமதிக்கமாட்டார். தனக்கு உயிர்மீது ஆசையில்லை என்பதால் பரிசோதனை தேவையில்லை என்று கூறுவார். அவர் விருப்பத்துக்கு மாறாக உணவோ நீரோ மருத்துவமோ இறுதிவரை அளிக்கக்கூடாதென்று முதல் நாளே என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டார்.
நானும் ராஜனும் அவரின் பக்கத்தில் படுத்துவிட்டோம். மேடையின் மறுபுறத்தில் இரு ‘நவீனன்களும்’ படுக்கை போட்டனர். மேடைக்கு முன்பாக மகளிர் அமைப்பு உறுப்பினர்களும், பொதுமக்களும் கொட்டக் கொட்ட கண்விழித்துக் கொண்டிருந்தனர்.
இந்த தியாக தீபத்தின் உண்ணாவிரத போராட்டத்தின் முதல்நாள் முடிவு பெற்றது.
தியாக வேள்வி தொடரும்……..
- மு.வே.யோ.வாஞ்சிநாதன்