திலீபனின் நினைவேந்தலில் அரசியல் பேசிய சுகாஷ்! வெளியான கண்டன அறிக்கை

நல்லூரில் இன்று இடம்பெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் ஆரம்பிப்பதற்கு முன்னர் சட்டத்தரணி சுகாஷ் ஒலிபெருக்கி வாயிலாக அரசியல் கருத்துக்களை தெரிவித்தார்.

இதன்போது நினைவேந்தலில் கலந்துகொண்ட விடுதலைப்புலிகளின் மூத்த போராளி பஷீர் காக்கா, நினைவேந்தல்களில் கட்சி அரசியலை கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம் என தெரிவித்திருந்தார். இதனால் அங்கு சிறிய சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றை பஷீர் காக்கா வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

திலீபனின் நினைவேந்தல் மட்டுமல்ல, எந்த நினைவேந்தல்களிலும் கட்சி அரசியலை கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம் என தயவுடன் வேண்டுகிறேன்.

அனைத்து மாவீரர்களின் பெற்றோர் சார்பிலும் அறிவிலியின் தந்தையான முத்துக்குமார் மனோகர் (பஷீர் காக்கா) ஆகிய நான் இந்த வேண்டுகோளை விடுகிறேன்.

இந்த ஆண்டின் திலீபன் நினைவு ஆரம்ப நிகழ்வு தொடங்கும் முன்னர் பிறிதொரு அணியினரை சாடும் வகையில் சட்டத்தரணி சுகாஷ் உரையாற்றியமை எமக்கு வேதனையை உண்டாக்குகிறது.

நேற்று இவர் சார்ந்த கட்சியின் ஏற்பாட்டாளரும் திலீபனை நேரில் கண்டவர்களில் ஒருவருமாகிய பொன் மாஸ்டரிடம் இந்நிகழ்வை பொதுநிகழ்வாக நடத்துவதில் உங்களுக்குள்ள சங்கடங்கள் என்னவென்று கேட்டேன். எதுவும் இல்லை என பதிலளித்தார். அது திருப்தி அளித்தது.

அந்த நம்பிக்கையை சிதறடிக்கும் விதத்தில் சட்டத்தரணி சுகாஷ் இன்றைய தினம் நடந்து கொண்டார். ஏற்கனவே மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏனைய கட்சிகளை தாக்கும் களமாக பயன்படுத்த வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமாரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

அதனை கடைப்பிடிப்பதாக அவர் என்னிடம் உறுதியளித்தார். எனினும் கிளிநொச்சியில் நிகழ்ந்த மாவீரர்களின் பெற்றோருடைய கௌரவிப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சாடியமை பற்றி செய்தி பத்திரிகையில் வெளியான போது மிகவும் வேதனைப்பட்டேன்.

அவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காக பொன் மாஸ்டரை சந்தித்து உரையாடினேன். எனவே இவ்வாண்டு திலீபனின் நினைவு நிறைவடையும் வரைக்கும் அரசியலை கலக்காமல் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மன்றாட்டமாக அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறேன். எமது உணர்வுகளை எதிர்காலத்தில் மதிப்பார்கள் என நம்புகிறேன் – என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *