ஜூலன் கோஸ்வாமி: முடிவுக்கு வருகிறது இரு தசாப்த கிரிக்கெட் வாழ்க்கை

இந்தியா,செப் 25

இந்தியாவில் கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் ஈடன் கார்டன் மைதானம், 1997ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் பந்தை நாலாபுறமும் அடித்து நொறுக்கினார்.

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்த ஜூலன் கோஸ்வாமி என்ற 15 வயது பெண், அங்கு பந்து பொறுக்கிப்போடும் பெண்ணாக மைதானத்தில் இருந்தார்.

ஆஸ்திரேலியாவின் விளையாட்டை திகைத்துப் பார்த்த அந்தத் தருணம், தன்னைப் பற்றி மதிப்பீடு செய்துகொள்வதற்கான தருணமாகவும் ஜூலன் கோஸ்வாமிக்கு இருந்தது. கிரிக்கெட்தான் தன்னுடைய வாழ்க்கை என்பதை ஜூலன் முடிவு செய்தார்.
இரு தசாப்தங்களின் புகழ்பெற்ற வாழ்க்கைக்குப் பிறகு 39 வயதான ஜூலன் கோஸ்வாமி உலகின் தலைசிறந்த பெண் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

லார்ட்ஸ் மைதானத்தில் தன்னுடைய கடைசி போட்டியை இன்று (செப்டம்பர் 24) விளையாட இருக்கும் ஜூலன், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 253 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

ஒரே கிரிக்கெட் வீரர் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் விளையாடிய தருணம்
தேசிய விளையாட்டு தினம்: இதை ஏன் கொண்டாடுகிறோம்? 5 தகவல்கள்
FIFA உலக கோப்பை 2022: கத்தாரில் நடைபெறும் போட்டி – முழு விவரம்
தன்னுடைய ஆரம்பக் கால நாட்கள் மற்றும் சந்தித்த சவால்கள் குறித்து பிபிசி இந்தி சேவையிடம் பகிர்ந்துகொண்ட ஜூலன், “கொல்கத்தாவில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள சக்டா என்ற சிறிய கிராமத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். என்னுடைய உறவினர்களும் மற்ற சிறுவர்களும் மதியநேரம் வீட்டு முற்றத்தில் கிரிக்கெட் விளையாடுவார்கள். முற்றத்திற்கு வெளியே சென்றால் பந்தை எடுத்து வந்து கொடுப்பது என்னுடைய வேலை. பின்னர், அவர்கள் மதியம் தூங்கச் சென்ற பிறகு நான் மட்டும் தனியாக கிரிக்கெட் விளையாடுவேன்” என்றார்.

1992ஆம் ஆண்டு நடந்த ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், கிரிக்கெட் மீது தனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியதாகவும், 1997ஆம் ஆண்டு நடந்த பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கிரிக்கெட்தான் தன்னுடைய வாழ்க்கை என தீர்மானிக்க வைத்ததாகவும் பிபிசியிடம் தெரிவித்த ஜூலன், 1992 உலகக் கோப்பையின்போது சச்சினை தொலைக்காட்சியில் பார்த்தபோது அனைவரும் சச்சின்… சச்சின் எனக் கத்தியது அற்புதமாக இருந்ததாகவும் கூறுகிறார்.
உலகக் கோப்பையைப் பிரபலப்படுத்துவதற்காக அப்போது செய்யப்பட்ட கிரிக்கெட்டுடன் சாப்பிடுங்கள், கிரிக்கெட்டுடன் உறங்குங்கள், கிரிக்கெட்டுடன் கனவு காணுங்கள் என்ற பிரசாரம் நிறைய இளம்வயதினருக்கு உத்வேகம் அளித்ததாக ஜூலன் கூறுகிறார்.

எனினும், தன்னையும் விளையாட்டில் சேர்த்துகொள்ள கிராமத்தில் இருந்த சிறுவர்களைச் சம்மதிக்க வைப்பது அவருக்கு எளிதாக இல்லை.
அதை நினைவுகூரும் ஜூலன், “நான் மிகவும் மெதுவாகப் பந்து வீசுவதாகவும், அணியில் உள்ள அனைவரின் மரியாதையையும் பெற நான் ஆல்ரவுண்டராக இருக்க வேண்டும் என்றும் சிறுவர்கள் கூறுவார்கள். இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, வேகமாக பந்து வீச பயிற்சி எடுத்தேன்.

பின்னர், எனது கிராமத்தில் போதிய வசதிகள் இல்லாததால் கொல்கத்தாவில் பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். நான் அங்கு செல்ல வேண்டுமென்றால் அதிகாலையே எனது கிராமத்தில் இருந்து புறப்பட வேண்டும். பின் மீண்டும் அங்கிருந்து திரும்பி வரவேண்டும். எனது பந்துவீச்சு மற்றும் என்னுடய உயரத்தால் ஈர்க்கப்பட்ட பயிற்சியாளர் பந்துவீச்சில் கவனம் செலுத்துமாறு என்னை அறிவுறுத்தினார்” என்கிறார்.

“தன்னுடைய வீட்டிலிருந்து பயிற்சி மையத்திற்குச் செல்ல ஜூலன் உள்ளூர் ரயிலில் தினமும் இரண்டு மணி நேரம் பயணிப்பார். பயிற்சியை முடித்துவிட்டு பள்ளிக்கும் அவசரமாகச் செல்வார். அவர் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் ஜூலன் கிரிக்கெட்டில் நுழைவதை விரும்பவில்லை. பின்னர், அவர் பயிற்சிக்கு வருவதை நிறுத்திவிட்டார். அவருடைய திறமையை உணர்ந்து அவரது கிராமத்திற்கே சென்று ஜூலனை விளையாட அனுமதிக்கும்படி கேட்டேன். அதன் பிறகு நடந்தது வரலாறு” என்கிறார் கொல்கத்தாவில் ஜூலன் பயிற்சி எடுத்த பயிற்சி மையத்தை நடத்திவரும் ஸ்வபன் சாது.

இன்று பெண்கள் கிரிக்கெட்டின் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக ஜூலன் கருதப்படுகிறார். 2002ஆம் ஆண்டு ஒருநாள் பெண்கள் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜூலன், பின்னர் இந்திய கிரிக்கெட் அணிக்குத் தலைமை தாங்கினார்.
இரண்டு தசாப்தங்களாக தனது விளையாட்டில் ஒற்றை மனதுடன் கவனம் செலுத்தியதால்தான் இந்த வெற்றியை ஜூலன் கோஸ்வாமி பெற முடிந்ததாக கிரிக்கெட் கட்டுரையாளர் அயாஸ் மேமன் கூறுகிறார்.

“ஜூலன் கோஸ்வாமி அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கையைக் கொண்டிருந்தார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்த நிலைத்தன்மை, திறமை மற்றும் அவருக்குள் இருந்த உந்துதலைக் காட்டுகிறது. ஆரம்பக் காலங்களில் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால் தனக்கானவை சிறப்பாக இல்லாதபோதும் அவர் கைவிடவில்லை. அந்த வலுவான மன உறுதியும், தொடர்ந்து உந்துதலோடு இருப்பதற்கான உத்வேகமும் அவரது வெற்றிக் கதையில் முக்கிய காரணியாக இருந்தன. அவர் விளையாடுவதைப் பார்க்கும்போது, இந்த விளையாட்டை விளையாடவே அவர் பிறந்தவர் என்பதை உணரலாம்” என்கிறார் அயாஸ் மேமன்.

ஜூலனின் கிரிக்கெட் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் சாதனைகள் படைப்பது கிட்டத்தட்ட அவரது வழக்கமாக இருந்துள்ளது. பெண்கள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனை அவர் வசமுள்ளது. முன்னதாக பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசியின் தரவரிசைப்பட்டியலில் முதலிடமும் பிடித்திருக்கிறார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இருக்கும் இந்தத் தருணத்தில் அந்தத் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். 2007ஆம் ஆண்டிற்கான ஐசிசியின் சிறந்த பெண் வீராங்கனை விருதையும் வென்று வரலாறு படைத்தார். அந்த விருதை வென்ற முதல் இந்திய பெண் ஜூலன்தான்.

அந்த விருதை பெற்றுவிட்டு பேசிய ஜூலன், “ஆண்கள் பிரிவில் இந்தியாவிலிருந்து யாரும் பரிந்துரைக்கப்படவில்லை, எனவே, எனது நாட்டிற்காக இதைச் செய்து அந்த ஏமாற்றத்தை ஈடுசெய்தது இன்னும் சிறப்பு. இந்த விருது பெண்கள் கிரிக்கெட்டுக்கு நிறைய பலனளிக்கும். பெண்கள் கிரிக்கெட் வளர்ந்து வருகிறது என்று நினைக்கிறேன். தற்போது ஊடகங்களில் நாங்கள் அதிகம் காட்டப்படுகிறோம். இது விளையாட்டிற்கு ஒரு நல்ல விஷயமாக இருக்கும். ஏனெனில் இது அதிக பெண்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கிறது” என்று கூறினார்.

சமீபத்திய ஆண்டுகளில் பெண்கள் அதிக அளவில் கிரிக்கெட்டில் நுழையும்போது என்ன நடக்கிறது என்பதை ஜூலன் கவனித்துவருகிறார்.

ஆரம்பக் காலத்தில் தான் பயிற்சி எடுத்த கொல்கத்தா விவேகானந்தா பூங்காவிற்குச் செல்லும்போது, நிறைய பெண் குழந்தைகள் மைதானத்தில் பயிற்சி எடுப்பதையும், அதில் கிட்பேக்கைக்கூட தூக்க முடியாத அளவிற்கு சின்ன குழந்தைகளாக சிலர் இருப்பதையும் பார்ப்பது தனக்கு ஆச்சர்யமளிப்பதாக ஜூலன் கூறுகிறார்.
தன்னைப் போன்ற இளம்பெண்கள் குடும்பத்தாரின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய இந்தச் சமூகத்தில் இத்தகைய மனநிலை மாற்றத்தை தன்னுடைய ஒரு தகுதியான பங்களிப்பாக ஜூலன் கருதுகிறார்.

1990கள் மற்றும் 2000களில் இந்திய பெண்கள் கிரிக்கெட் சங்கம் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் இல்லை. அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த இளம் வீராங்கனைகளான மித்தாலி ராஜ் மற்றும் ஜூலனிடம் அப்போதிருந்த மோசமான நிலைகள் பற்றி பகிர்வதற்கு கதைகள் உள்ளன.

சமீபத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டபிள்யூ.வி. ராமனுடன் யூடியூப் உரையாடலில் தனது கதையைப் பகிர்ந்து கொண்ட ஜூலன், “பெண்கள் கிரிக்கெட் சங்கத்திடம் குறைவான பணமே இருந்தது. எனவே நாங்கள் ரயிலில்தான் பயணம் செய்வோம். சில நேரங்களில் பெரிய கிட்பேக்குடன் முன்பதிவுசெய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்வோம். எங்களுக்கு வழங்கப்பட்ட மைதானங்களும் சிறந்த மைதானங்களாக இல்லை. எங்களுக்கு விமான பயணச்சீட்டு வழங்கப்பட்டாலும் உடமைகளுக்கான கூடுதல் கட்டணத்தை நாங்கள்தான் செலுத்த வேண்டும்.”
”உடமைகளின் அளவைக் குறைப்பதற்காக மைதானத்தில் அணியும் உடைகளை மட்டுமே எடுத்துச் செல்வோம். எங்களிடம் நல்ல ஷூவும் கிடையாது. பல வீரர்களால் தந்தைபோல பார்க்கப்பட்ட தாரக் சின்ஹா ஆஷிஸ் நெக்ரா போன்ற இளம் ஆண் வீரர்களிடம் இருந்து ஷூ வாங்கிவந்து பிற வீரர்களுக்கு கொடுப்பார். ஏதாவது முக்கியமான போட்டி வந்தால் சுழற்சி அடைப்படையில் எனக்கு கொடுப்பார்” எனக் கூறினார்.

இந்தச் சூழலில்தான் ஜூலன் கோஸ்வாமி போன்ற வீரர்களின் பங்களிப்பு இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டில் அவர்களை தனித்து நிற்க வைக்கிறது.

எதிரணியினர்கூட ஜூலனைப் பார்த்து பயந்திருக்கிறார்கள். பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் சனா மிர் இந்தியாவுக்கு எதிராக பல முக்கிய போட்டிகளில் விளையாடியுள்ளார்.

“ஒரு வேகப்பந்து வீச்சாளராக, எந்த வீரருடனும் எந்தவிதமான மோதலிலும் அவர் ஈடுபடுவதை நாங்கள் பார்த்ததில்லை. மைதானத்தில் அவருடைய நடத்தை முன்னுதாரணமாக இருந்தது. 20 வருடங்கள் கிரிக்கெட்டில் நீடிப்பது என்பது சாதாரண சாதனையல்ல. அவருடைய வேகம் மற்றும் உயரத்தால் (5 அடி 11 அங்குலம்), ஜூலானுக்கு எதிராக விளையாடுவது எங்களை வியர்க்கச் செய்யும். அவரிடம் இருந்து வரும் பந்தைப் பார்க்கக்கூட நாங்கள் எங்கள் கழுத்தை மிகவும் கஷ்டப்படுத்த வேண்டியிருந்தது. ஜூலனுக்கு எதிராக பேட்டிங் செய்வது எவ்வளவு கடினமாக இருந்தது என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும்” என்கிறார் சனா மிர்.

இரண்டு தசாப்தங்களாக ஜூலன் கோஸ்வாமியை எதிரணிக்கு மிகவும் ஆபத்தானவராகவும், ஈர்க்கக்கூடியவராகவும் இருந்தது எது?
அவரது உடற்தகுதி மற்றும் விளையாட்டின் மீதான ஆழ்ந்த ஈடுபாடுதான் ஜூலனை பல ஆண்டுகளாக தனித்து நிற்க வைத்ததாக அவரது குழந்தைப் பருவ பயிற்சியாளர் ஸ்வபன் சாது கூறுகிறார்.

“ஜூலன் இந்திய கிரிக்கெட்டில் தனது இடத்தைப் பிடித்த காலங்களில், இந்தியாவில் வெகுசிலரே பெண்கள் கிரிக்கெட்டை பார்த்தனர். ஜூலன் போன்றவர்கள் அணியில் சேர்வதற்கு முன்பு, டயானா எடுல்ஜி மற்றும் சாந்தா ரங்கசாமி போன்ற சில பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் மட்டுமே அறியப்பட்டனர். இந்தியாவில் சிறந்த ஆண் வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் உள்ளனர். ஆனால் பெண்கள் கிரிக்கெட் என்று வரும்போது, வேகப்பந்து வீச்சாளராக ஜூலனுக்கு இணையான பெயர்கள் குறைவு. ஒரு நாள் போட்டிகளில் 250 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார். 12 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 44 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியது துரதிர்ஷ்டவசமானது, ஏனெனில் பெண்கள் அணிக்கு பல டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த பெருமையும் அவருக்கு கிடைத்தது. டெல்லியில் உள்ள கிரிக்கெட் அகாடமிகளுக்குச் சென்றது எனக்கு நினைவிருக்கிறது, அங்கு சில இளம் பெண்களை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும். ஆனால் இப்போது, இந்த அகாடமிகள் கிரிக்கெட் விளையாடும் இளம் பெண்களால் நிறைந்துள்ளன. இதுதான் ஜூலன், மித்தாலி ராஜ் போன்ற வீரர்களின் உண்மையான சாதனை” என்கிறார் பல ஆண்டுகளாக ஜூலன் கோஸ்வாமியின் பயணத்தை தொடர்ந்து கவனித்து வந்த மூத்த விளையாட்டுச் செய்தியாளர் ஆதேஷ் குமார் குப்த்.

“ஜூலன் கோஸ்வாமி போன்ற வீரர்கள் இந்திய மகளிர் கிரிக்கெட்டை உலக வரைபடத்தில் கொண்டு வந்தனர். இது பெண்கள் கிரிக்கெட்டுக்கு அவரது மிகப்பெரிய பங்களிப்பாகக் கருதப்படும். இப்போது பெண்கள் கிரிக்கெட்டை பார்க்க மக்கள் வருகிறார்கள். இளம்பெண் விளையாட்டு வீரர்களுக்கு ஜூலன் சிறந்த முன்மாதிரியாக இருந்துள்ளார்” என்கிறார் அயாஸ் மேமன்.

சில வழிகளில், ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை முழுவதுமாகிவிட்டது. 1997 உலகக் கோப்பையின் போது பந்து பொறுக்கிப்போடும் பெண்ணாக அவர் தோன்றிய அதே மைதானத்தில், இந்தியன் பிரீமியர் லீக் எலிமினேட்டர் போட்டியை மணி அடித்து தொடக்கி வைக்க சமீபத்தில் அழைக்கப்பட்டார். அதேபோல, இங்கிலாந்துக்கு எதிராக 2002ஆம் ஆண்டு அறிமுகமாகிய ஜூலன், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாட்டிற்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (செப்டம்பர் 24) நடைபெறும் போட்டியோடு ஓய்வுபெறவுள்ளார்.

நன்றி பி.பி.சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *