நெல் கொள்வனவுக்கான திட்டம் தேவை: ஆளும் கட்சி உறுப்பினர்கள்

கொழும்பு,செப் 25

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக தயாரிக்க வேண்டுமென ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்திலும் இவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இரண்டு அரச வங்கிகளிலும் தேவையான நிதி வழங்கப்படாததால் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளதாகவும், இது விவசாயிகளுக்கு பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நெல் கொள்வனவுக்காக இருநூறு கோடி ரூபாயை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குமாறு இரண்டு அரச வங்கிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை ஐந்து சதம் கூட வழங்கப்படவில்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் உடனடியாக தலையிடுமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே இரண்டு மூன்று வாரங்களாக நெல் கொள்வனவு வேலைத்திட்டம் தாமதமாகி வருவதால், அதற்கான பணத்தை உடனடியாக வழங்குவதற்கு அமைச்சர் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *