இந்தியாவில் இருந்து நனோ-நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்தமை தொடர்பான சிறப்பு கணக்காய்வு அறிக்கை, மேலதிக விசாரணைக்காக விவசாய அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
உண்மைகளை ஆராய்ந்த பின்னர் அது தொடர்பான அறிக்கை அடுத்த நடவடிக்கைக்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, இந்தியாவின் குஜராத்தில் உள்ள இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனத்திடம் இருந்து கிட்டத்தட்ட 2.1 மில்லியன் லீட்டர் திரவ நனோ நைட்ரஜன் உரத்திற்கான இறக்குமதி கட்டளையை விவசாய அமைச்சு வழங்கியது.
இந்த நடவடிக்கையின் போது, இந்திய சந்தையில் அதன் விலை 3.23 டொலர்களாக இருந்தபோது, 12.45 டொலர்களுக்கு இலங்கை அதனை கொள்வனவு செய்தமை தெரியவந்தது.
இது உண்மையான சில்லறை விலையை விட 1,867 ரூபாய் அதிகம். இந்த தொகை முழுமையாக கொள்வனவு கட்டளை செய்யப்பட்ட உரங்களுக்காக செலவிடப்பட்டிருந்தால், இலங்கைக்கு 7,841 மில்லியன் ரூபாய் மேலதிக செலவு ஏற்பட்டிருக்கும்.
இந்தநிலையில் அதிக விலைக்கு நனோ நைட்ரஜன் உரங்களை இறக்குமதி செய்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை கருத்திற்கொண்டு கணக்காய்வாளர் நாயகம் இந்த விசாரணையை முன்னெடுத்திருந்தார்.
பிற செய்திகள்