வீட்டில் சாப்பிடுவதற்கு உணவுகள் இல்லை: குறைவடையும் மாணவர் வருகை!

வீட்டில் சாப்பிடுவதற்கு போதுமானதாக உணவுகள் இல்லை என்ற காரணத்தால் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் வீதம் வெகுவாகக் குறைந்துள்ளது.

நாட்டில் நீண்டகாலமாக நிலவும் போசாக் குறைபாடு மற்றும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக இந்நிலை மோசமடைந்துள்ளதாக இணை ஆசிரியர் சேவை சங்கத்தின் நிறைவேற்று செயலாளர் விமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னதாக 1.1 மில்லியன் மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளாகியும் அது நடக்கவில்லை. உணவுப் பணவீக்கம் 90 சதவீதமாக மாறியுள்ளது.

அதேநேரம் பெற்றோரின் வருமானம் குறைந்துள்ள நிலையில், மாணவர்களுக்கு உணவுக்காக 30 ரூபாய் வழங்குவது பயனற்றது.

கிராமங்களை விட கொழும்பில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, ஏனெனில் கிராமங்களில் உள்ள மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களிலிருந்து உணவு மற்றும் தண்ணீரை பெற்றுக்கொள்ளமுடியும்.

எனினும் கொழும்பில் அனைத்தையும் பணத்தால் மட்டுமே பெற்றுக்கொள்ள முடிகிறது. பாடசாலைகளில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்.

இதனையடுத்து தற்போது ஆசிரியர்களின் ஆதரவுடன் மாணவர்களுக்கு கஞ்சி விநியோகம் செய்யப்படுகிறது. மாணவர்களின் பெற்றோர்களும் இதற்கு உதவுகிறார்கள்.

சுமார் 60% மாணவர்கள் மட்டுமே இப்போது பள்ளிக்கு வருகிறார்கள். மேலும் காலை பிரார்த்தனை காலம் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *