
கிளிநொச்சி மாவட்டத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் இளைஞர்கள் தமக்கு தொடர்ச்சியாக ஊசியை ஏற்றுவதற்கு பதிலாகப் பயன்படுத்தப்படும் ‘கனூலா’ என்ற மருத்துவ உபகரணத்தைப் பொருத்தியதும் மருத்துவமனைகளிலிருந்து நழுவிச் செல்கின்றனர் என்றும், அவ்வாறு போடப்படும் ‘கனூலா’ ஊடாக உயிர் கொல்லி ஹெரோய்னை அவர்கள் உட்செலுத்துகின்றனர் என்றும் அதிர்ச்சித் தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.
தொடர்ச்சியாக ஊசி ஊடாக உயிர் கொல்லி ஹெரோய்னை பயன்படுத்துபவர்களுக்கு குறிப்பிட்ட காலத்தின் பின்னர், உடலில் ஊசியை ஏற்ற முடியாத நிலைமை உருவாகும். அவ்வாறான இளைஞர்கள் கிளிநொச்சியிலுள்ள மருத்துவமனைகளுக்கு வெவ்வேறு நோய் நிலைமைகளைக் கூறி சிகிச்சைக்காக சேருகின்றனர்.
மருத்துவமனைகளில் தொடர்ந்து ஊசி ஏற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் ‘கனூலா’ போடப்பட்டதும் மருத்துவமனைகளிலிருந்து நழுவி விடுவிகின்றனர். பின்னர் தமக்கு போடப்பட்டுள்ள ‘கனூலா’ ஊடாக உயிர் கொல்லி ஹெரோய்னை ஏற்றிக் கொள்கின்றனர். இது ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.