
சக்தியை நோக்கி அனுட்டிகும் விரதங்களில் ஒன்று தான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப்போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள், உபவாசியாக இருந்து பூஜித்தபிறகே உணவருந்தி பஞ்சனை மற்றும் பாயில் படுக்காமல் தரையில் விரிப்புகளில் படுக்கவேண்டும். பிரதமைத் திதியில் ஹஸ்த நட்சத்திரம் கூடுமானால் அது உன்னதமான நாளாகும். அந்த நாளில் தேவி தன்னைப் பூஜித்தவருக்கு வேண்டிய வற்றையெல்லாம் கொடுப்பாள் என்று சொல்வார்கள்.
நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக கூறப்படுகிறது. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று கூறப்படுகிறது.
நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகலசெல்வங்களையும் பெறலாம்.
விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள்.
இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.
வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும். நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும் என்று கூறப்படுகிறது.
நவராத்திரி வழிபாடு சக்திமகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கமாகும்.
முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி பரா சக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹா லட்சுமியை வழிபட வேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டி சரஸ்வதிதேவியை வழிபட வேண்டும்.
நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமங்களை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும். நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். . நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார் என்பது ஐதீகம்.
நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும். கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.