
கொழும்பு, செப்.28
ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை இலங்கை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் என மீனாட்சி கங்குலி கோரியுள்ளார்.
இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மறுநாளே, 84 பேரை பொலிஸார் கைது செய்தனர். அத்துடன் மோசமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர் ஆர்வலர்களை விடுவிக்கக் கோரிய போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர்த் தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.
கொழும்பின் முக்கிய பொது வீதிகள் மற்றும் அரசாங்க கட்டடங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து கடந்த 23 ஆம் திகதி உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
இந்த ஒழுங்குமுறையின் கீழ், குறித்த பகுதிகளுக்குள் யாரையும் கைது செய்ய காவல்துறைக்கு பரந்த அதிகாரம் உள்ளது மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மேல் நீதிமன்றம் மட்டுமே பிணை வழங்க முடியும்.
எனவே இந்த கடுமையான கட்டுப்பாடுகள், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும், கருத்து தெரிவிப்பதற்கும் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிகப்படியான பலத்தை பயன்படுத்துவதையும், நீண்டகாலமாக தடுப்புக் காவலில் வைப்பதையும் உறுதிப்படுத்துகிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி, இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் , கொழும்பில் பொதுமக்களின் எதிர்ப்பைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் புதிய ஒழுங்குமுறை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய அவநம்பிக்கையான முயற்சியாகும்.
“நாடு ஒரு ஆழமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க போராடிக்கொண்டிருக்கும்போது, அரசாங்கம் மக்களின் குரல்களைக் கேட்பதை எளிதாக்க வேண்டும், அவர்கள் பேசும்போது அவர்களை சிறையில் தள்ளக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ், அமைதியான ஒன்றுகூடல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைகளை மதிக்கவும் பாதுகாக்கவும் இலங்கைக்கு கடமைகள் உள்ளன. எனினும் இலங்கையின் புதிய ஒழுங்குமுறைஈ மனித உரிமைகள் சட்ட தரங்களை பூர்த்தி செய்யவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், உரிமைகள் தொடர்பில், அரசாங்கத்தின் தொடர்ச்சியான மீறப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் ஜனாதிபதி விக்ரமசிங்கவின் கீழ் துரிதப்படுத்தப்பட்ட அடக்குமுறைகள் என்பவற்றை தடுப்பதற்கு, வலுவான ஜெனீவா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் மிகவும் முக்கியமானது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு சீர்திருத்தங்கள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்கு அமைதியான முறையில் அழைப்பு விடுக்கும் இலங்கையர்கள், இப்போது வன்முறை, கைது மற்றும் நீண்டகால தடுப்புக்காவலில் இன்னும் பெரிய அபாயங்களை எதிர்கொள்கின்றனர்” என்று மீனாட்சி கங்குலி கூறினார்.