
யாழ். செப்.28
ஒழுங்கு முறைகளை பின்பற்றி கடலட்டைப் பண்ணைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எமது மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவற்கு கிடைத்த சந்தர்ப்பத்தினை முடிந்தளவு பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கடலட்டைப் பண்ணைகள் தழுவல் முறையில் அனுமதி வழங்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள போதிலும், ஒழுங்குமுறைகள் மீறப்படுமாயின் சகித்துக் கொள்ள முடியாது எனவும், அவ்வாறான பண்ணைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடலட்டைப் பண்ணையாளர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே, கடற்றொழில் அமைச்சர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உடனடியாக சுருக்கு வலைத் தொழிலைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழில் திணைக்களம், கடற்படையினர், கடற்றொழில் சங்கங்கள் இணைந்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தொடர்ச்சியான கூட்டு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பிரஸ்தாபித்துள்ளதாகவும் தெரிவித்தார்.