வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் உயிர்கொல்லியான ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்கும் முகமாக விழிப்புணர்வு நடைபயணம் நேற்று யாழ். போதனா மருத்துவமனை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடைபவனி நண்பகல் 12 மணியளவில் மருத்துவமனை முன்றிலில் ஆரம்பமாகி மணிக்கூட்டு கோபுர வீதியூடாக, யாழ்.பொலிஸ் நிலையத்தை அடைந்து அங்கிருந்து பிரதான வீதியூடாக கச்சேரியை வந்தடைந்து யாழ்.மாவட்ட செயலரிடம் மருத்துவமனை சமூகத்தினரால் மனு கையளிக்கப்பட்டது.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
உயிர்கொல்லி போதைப்பொருள் விநியோக வலையமைப்பு, போதைப்பொருள் விநியோகம், இளம் சமுதாயத்தைப் போதைப்பொருளுக்கு அடிமையாக்குதல்போன்ற சமூக அழிப்பு செயற்பாடுகள் எமது பிராந்தியத்தில் விரிவாக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளம் சந்ததியினரே இதற்கு குறிவைக்கப்படுகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படும் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
வடமாகாணத்தில் இளையோரின் வளமான வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது. பொருளாதாரம் சிதைக்கப்படுகிறது. போதைப்பொருள் பாவனையிலிருந்து இளம் சந்ததியினரையும் நாட்டையும் காப்பதற்குரிய நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
அதன்படி, போதைப்பொருள் தொடர்பான முறைப்பாடுகளை முப்படைகள் விரைந்து விசாரணைக்குட்படுத்த வலியுறுத்த வேண்டும்.
போதைப்பொருள் விநியோகம் தொடர்பான தகவல்களை வழங்குவோரைப் பாதுகாப்பதற்கான பொறிமுறையை உருவாக்க வேண்டும்.
போதைப்பொருள் சம்பந்தமான தகவல்களை தயக்கமின்றிவழங்க அதிபர்கள், ஆசிரியர்களை ஊக்கப்படுத்தி அவர்களைப் பாதுகாக்க வழிவகை செய்யவேண்டும்.
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மக்கள் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து பொலிஸாருடன் இணைந்து போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த உதவியளிக்கப்படுதல் அவசியம்.
போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிப்பதற்கு உரிய கட்டமைப்புகளை உருவாக்கி அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளை உறுதிப்படுத்தல் வேண்டும். வடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ப்படுதல் வேண்டும்– என்றுள்ளது
.