
எமது தமிழ் சமூகத்திற்கு ஏற்படுகின்ற அநீதிகளுக்காக மாத்திரமன்றி தற்போது ஏனைய சமூகங்களுக்கும் ஏற்படுகின்ற அடக்குமுறைகளையும் கருத்திற்கொண்டே பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
மூவின மக்களும் இந்தக் காட்டுச் சட்டத்தை, மனித நேயத்திற்கு எதிரான சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்க ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் நாடுபூராகவும் மேற்கொள்ளப்படுகின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கெதிராகக் கையெழுத்துச் சேகரிக்கும் போராட்டம் மத்தியமுகாம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்:
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவிலே மத்தியமுகாம் பிரதேசத்திலே ஆரம்பித்திருக்கின்றோம்.
இந்த நாட்டிலே மிகவும் மோசமானதொரு அடக்குமுறையைக் கையாள்வதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த சட்டமானது. இந்த நாட்டில் பல உயிர்களைக் காவு கொள்வதற்கும் காரணமாயிருந்திருக்கின்றது. இந்தச் சட்டம் இன்னும் இந்த நாட்டுக்குத் தேவையா என்கின்ற பல கேள்விகளுக்கு மத்தியில் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும் முகமாக நாங்;கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று இச்;சட்டத்திற்கெதிராக இதை இல்லாமல்; செய்வதற்காக மக்கள் முன் சென்று கையெழுத்து போராட்டத்தினை ஆரம்பித்திருக்கின்றோம்.
குறிப்பாக இந்தப் பயங்;கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாங்களாக இருக்கின்ற போதிலும் மத்தியமுகாம் உட்பட தமிழர் பிரதேசங்களிலே அதிகமான உயிர்களைக் காவு கொள்வதற்கும் இந்;தச் சட்டமே காரணமாக அமைந்திருக்கின்றது.
அந்த அடிப்படையில் இந்தச் சட்டத்தினுடாகக் குறிப்பாகத் தமிழர்கள் எமது உரிமை, இருப்பு உட்பட பலவற்றை இழந்தவர்களாவே இருக்கின்றார்கள். எமது சமூகத்திற்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற அநீதிகளுக்கு மாத்திரமல்லாமல், தற்போது ஏனைய சமூகங்களுக்கும் இச்சட்டத்தின் மூலம் ஏற்படுகின்ற அடக்குமுறைகளும் இல்லாமல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலேயே நாங்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.
எனவே இந்த நாட்டில் வாழும் மூவின மக்களும் இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்ட காட்டுச் சட்டத்தை, மனித நேயத்திற்கு எதிரான சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்க ஒன்றுபட்டுச் செயற்படுவதோடு, இந்த நாட்டிலே அனைத்து இனங்களும சமஉரிமையுடன், சமாதானமாக, சமத்துவமாக வாழ அனைவரும் கரம்கோர்ப்போம் வாருங்கள் என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்