புலிகளை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கக் கோரிய மனு: தள்ளுபடி செய்த மலேசிய நீதிமன்றம்

தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கக் கோரிய மனுவை விசாரணைக்கு எடுக்காமல் மலேசிய பிராந்திய நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

மனு தொடர்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், நீதிமன்றத்தின் சட்ட வரம்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று நீதிபதிகள் தமது நிராகரிப்புக்கு காரணம் காட்டியுள்ளனர்.

முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகளை, பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்குவதற்கான மனுவினை மீள்பரிசீலனைக்காக, 2020 ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதியன்று மனுத்தாரர் பாலமுருகன், நீதிமன்ற ஆணையை பெற்றார்.

எனினும் 2020, செப்டம்பர் 7ஆம் திகதியன்று மேல் நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்தது.

இதனையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டபோதும், அதிலும் மனுவானது நிராகரிக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 20ஆம் திகதியன்று தமது மேன்முறையீட்டை தொடரக்கோரி மனுத்தாரர் பிராந்திய நீதிமன்றில் தமது மனுவை தாக்கல் செய்தார்.

தமது மனுவில் மலேசியாவின் உள்துறை அமைச்சர் உட்பட்டவர்களை பிரதிவாதிகளாக குறிப்பிட்ட மனுதாரர், வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான தகவல்கள் செல்லாது என்றும், இது கூட்டாட்சி அரசியலமைப்புக்கு முரணானது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே 2019 இல் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்ததாக கூறப்பட்ட மலேசியாவின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 12 பேரில் பாலமுருகனும் அடங்கியிருந்தார்.

எனினும் 2020 இல் பாலமுருகன் உட்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மலேசிய நாட்டின் அப்போதைய சட்டமா அதிபர் விலக்கிக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *