
கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில் விசேட சொகுசு வார இறுதி புகையிரதமொன்று எதிர்வரும் முதலாம் திகதி (1) முதல் இயக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடக மற்றும் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
முன்கூட்டியே ஆசனங்களை முன்பதிவு செய்யும் வசதி கொண்ட இந்த சொகுசு புகையிரதம் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் கண்டி வரை தொடர்ந்து இயக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் நேற்று (29) இடம்பெற்ற புகையிரத எதிர்காலத் திட்டங்களும் புதிய புகையிரதப் பாதைகளை ஆரம்பிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கோட்டை நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் புதிய ரயில் கண்டியை காலை 9.18 மணிக்கு வந்து மாலை 4.50 மணிக்கு கண்டியில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
கண்டிக்கு செல்லும் ஒரு பயணத்தில் முதல் தர ஆசனம் 2000 ரூபாவுக்கும் இரண்டாம் தர ஆசனம் 1500 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் அநுராதபுரம் வரை சொகுசு புகையிரத சேவை ஆரம்பிக்கப்படும் எனவும், அது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்