
கொழும்பு, செப்.30
வார இறுதியில் பயணத்தை மேற்கொள்ளும் வகையில் கொழும்பு – கோட்டையில் இருந்து கண்டி வரை விஷேட சொகுசு ரக சுற்றுலா தொடருந்து சேவை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பயணிகளின் கோரிக்கைக்கு இணங்க இந்த தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, வாராந்தம் சனிக்கிழமை காலை 6.30 க்கு கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ள விஷேட சொகுசு ரக சுற்றுலா தொடருந்து முற்பகல் 9.18 அளவில் கண்டி தொடருந்து நிலையத்தை சென்றடையவுள்ளது.
மீண்டும் பிற்பகல் 4.50 அளவில் கண்டி தொடருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ள குறித்த விஷேட சொகுசு ரக தொடருந்து இரவு 7.40க்கு கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.