
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகி – சிகிச்சைக்கு வரும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன .
அத்துடன் , அலைபேசிகளை அதிகளவில் பயன்படுத்தும் மாணவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் சந்தர்ப்பங்களும் பதிவாகியுள்ளன இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் பேராசிரியர் கீதாஞ்சலி சத்தியதாஸ் தெரிவித்துள்ளார் .
பெற்றோர் தமது பிள்ளைகளின் நடவடிக்கையில் கூடுதல் அக்கறையுடன் இருக்க வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார் .
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது :
தற்காலத்தில் அலைபேசிகளின் பயன் பாடுகள் இளைஞர்களிடம் மட்டுமல்லாமல் மாணவச் சமூகத்திடமும் தீவிரம் பெற்றுள்ளன . தரம் ஒன்பதுக்கு மேற்பட்ட மாணவர்களில் 97 வீதமானவர்கள் இன்று அலைபேசிகளைச் சொந்தமாக வைத்திருப்பவர்களாக – அல்லது அதீத மாகப் பயன்படுத்துகின்றவர்களாக இருக்கின்றனர் .
அதிலும் குறிப்பாக 12 வயது தொடக்கம் 17 வயதுக்கு இடைப் பட்ட சிறுவர்கள் இணைய விளையாட்டுக்களில் ( வீடியோ கேம் ) தீவிரமாக ஈடுபடுகின்றனர் .
இந்த விளையாட்டுக்கள் ‘ சவால் நிறைந்தவை ‘ என்ற போர்வை யின் கீழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அதற்கு தாமாகவே அடிமையாகின்றனர்.
இணைய விளையாட்டுக்களுக்கு சிறுவர்கள் அடிமையாகும்போது அது சிறுவர் களின் உடல் நலனில் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றது .
நீரிழிவு , உயர் குருதி அமுக்கம் , கொலஸ்ரோல் , நோய் எதிர்ப்புத் தன்மை குறைவடைதல் , என்புத் தொகுதிகள் சார்பான நோய்கள் என்பன மாணவர்கள் மற்றும் சிறுவர்களை ஆட்கொள்கின்றன .
ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்தில் 16 தடவைகள் கண்களைச் சிமிட்ட வேண்டும் .
இணைய விளையாட்டுக் களில் பார்வைக் குவிவைச் செலுத்தி ஈடுபடுவதால் இந்தக் கண்சிமிட்டல் 8 தடவைகளாகக் குறைகின்றன . இதனால் பார்வைக் குறைபாடு மற்றும் பார்வை இழப்பு போன்ற பிரச்சினைகளும் மாணவர்களுக்கு ஏற்படுகின்றன .
எனவே பெற்றோர் தமது குழந்தைகளின் அலைபேசிப் பாவனையில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.
பிற செய்திகள்