
மாவடியில் இருந்து மூளாய் ஊடாக காரைநகர் செல்லும் வழியில் கொலைக்குழிகள் உள்ளது. அடுத்த மழை வந்தால் குறித்த வீதியில் இரண்டு அல்லது மூன்று உயிர்கள் காவுகொள்ளப்படும். இதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை தான் பொறுப்பேற்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் நல்லதம்பி பொன்ராசா தெரிவித்துள்ளார்.
வலி. மேற்கு பிரதேச சபையின் 56வது அமர்வில் கலந்துகொண்டு வீதிகளின் சீரின்மை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
காரைநகருக்கு செல்லும் 782, 786 மற்றும் 785 பேருந்து வழித்தட வீதிகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
கடந்த தீபாவளி அன்று பெய்த மழை காரணமாக மாவடியில் இருந்து மூளாய் ஊடாக செல்லும் 786 வழித்தட வீதியில் பாதை எது பள்ளம் எது எனத் தெரியாமல் ஐந்துபேர் விழுந்துள்ளார்கள். அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது.
வெயில் காலத்திலேயே வீதி எது பள்ளம் எது என்று தெரியாது. இந்நிலையில் மழை காலத்தில் எவ்வாறு அடையாளம் காணமுடியும்? வீதி அபிவிருத்தி அதிகாரசபை தூக்கத்தில் உள்ளதா? வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் இவ்வாறான செயற்பாட்டினை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இங்கிருக்கும் மக்கள் மக்கள் இல்லையா? ஏனைய பகுதிகளில் காப்பெட் வீதி அமைத்துக் கொடுக்கப்படுகிறது. இந்த வீதிகளை தார் கலவையிட்டு தற்காலிகமாக என்றாலும் புனரமைப்பு செய்யவேண்டும்.
காரைநகர் – ஊர்காவற்துறை கடற்பாதையானது மண்ணெண்ணெய் இல்லை என ஓடுவதில்லை. இதனால் பல மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
காரைநகர் பிரதேச சபை அந்த பாதையினை பொறுப்பேற்று இயக்க முன்வந்தும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதனை வழங்க மறுக்கிறது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை சபையின் இவ்வாறான செயற்பாட்டினை மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நான் வன்மையாக கண்டிக்கிறேன் – என்றார்.
பிற செய்திகள்