சிங்கப்பூர் கடற்பரப்பில் மூழ்கிய நிலையில் காணப்பட்ட கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 300க்கும் அதிகமான இலங்கை அகதிகளை வியட்நாம் தமது நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளது.
கனடாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு மீட்கப்பட்ட அகதிகள் வியட்நாம் துறைமுகத்திற்கு கொண்டு சென்று வியட்நாமில் உள்ள தற்காலிக முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக
அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்,தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வியட்நாம் அதிகாரிகள் முயற்சித்தால் அதற்கு இணங்கப் போவதில்லை எனவும் தங்களது உயிரை
தாங்களே மாய்த்துக் கொள்வதாகவும் நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உயிர்வாழ முடியாத நிலை காணப்படுவதால் நாட்டை விட்டு தப்பி வந்துள்ளதாகவும் அதனால் ஐக்கிய நாடுகள் சபை தங்களை பொறுப்பேற்க
வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை திரும்புவதற்கு விருப்பம் இல்லை என தெரிவித்து இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் உணவை புறக்கணித்து போராட்டத்தில்
ஈடுபட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன.