பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 97வது ஜனன தினம் நேற்று செவ்வாய்க்கிழமை(22) வெகு சிறப்பாக கொழும்பு 13 புதுச்செட்டித்தெருவிலுள்ள இலங்கை ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய நிலையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு விசேட வழிபாடுகளுடன், தேர் பவனியும் நடைபெற்றது.
ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய நிலையத்தின் தலைவர் எஸ்.என்.உதயநாயகம் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. மேலும் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் திருவுருவச் சிலைக்கு பஞ்சமூர்த்த அபிஷேகம் செய்யப்பட்டு சாயி பூஜையும் சாயி பஜனையும் இடம்பெற்றதுடன்.
அதனையடுத்து சித்திரத் தேர் பவனி சாயி நிலையத்திலிருந்து எடுத்து வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து வீதி உலா வந்தது. தேர் பவனியானது சாயி சுற்று வட்ட சுற்றாடலிலுள்ள புதுச் செட்டித்தெரு, வன்றோயன் வீதி, சங்கமித்த மாவத்தை, பாபர் வீதி, விவேகானந்தா மேடு மற்றும் ஜம்பட்டா வீதி ஊடாக மீண்டும் சாயி நிலையத்தை வந்தடைந்தது.
சித்திர தேர்பவனி வீதி உலா வந்தபோது சாயி பக்தர்கள் பயபக்தியோடு தேர் பவனியை வரவேற்று பாபாவின் ஆசியையும் அருளையும் பெற்றுக்கொண்டனர்.