_637db0ba1a4b2.jpg)
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைகழக பிக்குமார் மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் கல்வேவ ஸ்ரீதம்ம தேரரை நீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கல்வேவ ஸ்ரீதம்ம தேரர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.எல் மஹவத்த முன்னிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ஸ்ரீதம்ம தேரரை பிணையில் விடுதலை செய்வதற்கு மேலதிக நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
தேரரின் வெளிநாட்டுப் பயணத்தையும் தடை செய்யுமாறு உத்தரவிட்டார்.
மேலும், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாத தடுப்பு பணியகத்தில் ஆஜராக வேண்டும் என மற்றுமொரு பிணை நிபந்தனை விதிக்கப்பட்டது.
சந்தேகநபர் சிறிதம்ம தேரர் வழக்கு தொடர்பான வாக்குமூலங்களை வழங்குவதை தவிர்க்குமாறு அவருக்கு பிணை நிபந்தனை விதித்த மேலதிக நீதவான், விசாரணைக் காலத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் அவ்வாறு எதாவது முறைப்பாடுகள் செய்யப்பட்டால் பிணை இரத்துச் செய்யப்படும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மற்றுமொரு சந்தேகநபராக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே பெயரிடப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, இந்த முறைப்பாடு எதிர்வரும் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.