முத்துசிவலிங்கத்தின் மறைவு – மலையகத்திற்கும், இ.தொ.காவிற்கும் பாரிய இழப்பு – பாரத் அருள்சாமி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்துசிவலிங்கம் ஐயா மறைந்தமை இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு ஒரு பாரிய இழப்பு என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாரத் அருள்சாமி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இரங்கல் தெரிவிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் இழப்பிற்கு பிறகு, முன்னாள் தலைவர் முத்துசிவலிங்கத்தின் திடீர் மறைவு கவலை அளிக்கின்றது.

அவர் அரசியல் செயற்பாடுகளில் இருந்த காலத்தில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு, தொழிலாளர் கல்வி மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தனது மும்முரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் காலம் முதல் அமரர் முத்து சிவலிங்கம் அவர்கள் பெருந்தோட்டத்துறைக்கு பல்வேறு முன்மாதிரியான சேவையாற்றியதோடு, பாராளுமன்றத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்ததோடு, பிரதியமைச்சராகவும் மக்களுக்கு சேவையாற்றியுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 83 வருட அரசியல் வளர்ச்சிக்கு அடித்தளமாக செயற்பட்டவர்களில் இவரும் ஒருவர். எம்மை போன்ற வளர்ந்து வரும் இளம் தலைமுறைக்கு எப்போதும் துணையாக நின்றவர்.

அன்னாரின் பிரிவால் துயர்கொண்டுள்ள குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *