இங்கிலாந்தின் முன்னிலை கால்பந்தாட்டக் கழகங்களில் ஒன்றான மென்செஸ்டர் யுனைடெட் கழகத்தை விற்பனை செய்வது குறித்து ஆராயப்படவுள்ளதாக என அக்கழகத்தின் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
‘த ரெட் டெவில்ஸ’ என வர்ணிக்கப்படும் மென்செஸ்டர் யுனைடெட் 1878 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட கிளேஸர் குடும்பம், மென்செஸ்டர் யுனைடெட் கழகத்தின் தற்போதைய உரிமையாளராக உள்ளது.
அக்கழகத்தின் நட்சத்திர வீரரான போர்த்துகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அணி முகாமையாளர் எரிக் டென் ஹக் உட்பட உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான முறுகல் நிலை கடந்த வாரம் பகிரங்கமாகியது.
இந்நிலையில், பரஸ்பர புரிந்துணர்வின்படி மென்செஸ்டர் யுனைடெட்டிலிருந்து ரொனால்டோ உடனடியாக வெளியேறுகிறார் என அக்கழகம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிக்கையொன்றில் தெரிவித்தது.
அதன்பின் சில மணித்தியாலங்களில், இக்கழகத்தின் விற்பனை குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக மென்செஸ்டர் யுனைடெட் கழகம் விடுத்த அறிக்கையில், கழகத்துக்கான புதிய முதலீடு, விற்பனை அல்லது நிறுவனம் தொடர்பான ஏனைய பரிவர்த்தனைகள் உட்பட அனைத்து மாற்று உபாயங்களையும் பணிப்பாளர் சபை கருத்திற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மென்செஸ்டர் யுனைடெட் கழகத்தை 2005 ஆம் ஆண்டில் 790 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (934 மில்லியன் அமெரிக்க டொலர்) விலையில் கிளேஸர்ஸ் குடும்பம் வாங்கியது. அதன்பின் பெரும் கடன் சுமைக்குள் அக்கழகம் தள்ளப்பட்டப்பட்டது.
அதேவேளை, கழகத்தின் ஆதரவாளர்கள் மத்தியில் கிளேஸர்கள் ஆதரவும் குறையத் தொடங்கியது.
மென்செஸ்டர் யுனைடெட் கழகத்தின் பிரபல அணி முகாமையாளரான சேர் அலெக்ஸ் பேர்குசன் 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பின்னர், போட்டிகளிலும் அக்கழகம் குறிப்பிடத்தக்களவு பிரகாசிக்கவில்லை.
ப்றீமியர் லீக் சம்பியன் பட்டத்தை இறுதியாக அலெக்ஸ் பேர்குசனின் பயிற்சியின் கீழ் 2012ஃ2013 பருவகாலத்தில் வென்றது. 2007 ஆம் ஆண்டின் பின்னர் எந்தவொரு கிண்ணத்தையும் அக்கழகம் வெல்லவில்லை.
தற்போதைய பயிற்றுநர் எரிக் டென் ஹக் மீதான தனது விமர்சனத்தில், இதையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது,
கத்தார் 2022 உலகக் கிண்ணப் போட்டிகள் காரணமாக, இங்கிலாந்து ப்றீமியர் லீக் போட்டிகளுக்கு நவம்பர் 13 முதல் டிசெம்பர் 26 வரை ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது இச்சுற்றுப்போட்டியின் புள்ளிகள் பட்டியலில் மென்செஸ்டர் யுனைடெட் 5 ஆவது இடத்தில் உள்ளது.