சரண், நவ 27
பீகாரில் சரண் மாவட்டத்தில் லகான்பூர் கிராமத்தில் நபர் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு சாலையோரம் இருந்த உணவகத்தில் கும்பலாக சிலர் உணவு சாப்பிட்டு கொண்டிருந்து உள்ளனர்.
அப்போது, திடீரென கார் ஒன்று வேகமுடன் வந்து அவர்கள் மீது மோதி, கடையையும் உடைத்து கொண்டு சென்று மோதி நின்றது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்து உள்ளார். தவிர,18 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து கிராமவாசிகள் உயிரிழந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்ற போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர் குடிபோதையில் இருந்துள்ளார் என கிராமவாசிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.