மட்டக்களப்பில் நிர்வாகப் பயங்கரவாதம் நடைபெறுகிறதாம் என பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட்
குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தமிழ் மாவட்ட நிருவாகத்தை மையப்படுத்தியதாக இவரது கருத்து
அமைந்துள்ளது.இது உண்மையில் கண்டிக்கத்தக்க கருத்தாகும். அப்படிப் பார்த்தால் இந்த நிர்வாகப் பயங்கரவாதத்தால் எத்தனை உயிர்கள் இழக்கப்பட்டன? எப்படியான அழிவுகள் ஏற்பட்டன? என்பது பற்றிய விபரங்கள் அறியப்பட வேண்டும்.
இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி. சிறிநேசன் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
முதலமைச்சராக இருக்கும் வரை தமிழர்களிடம் செழிப்பு முகம் காட்டிய இவர் தற்போது தமிழ் நிருவாகிகள் விடயத்தில்
சுழிப்பு முகம் காட்டுகிறார்.
ஏறாவூர்ப் பிரதேச சபையில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு நம்மவரிடம் உதவிகளைப் பெற்று விட்டு வாழைச்சேனையில் த.தே.கூட்டமைப்பு ஆட்சியமைப்பதில் காலை வாரிய இவரை இன்னும் நம்புவதற்கு யாரும்
நண்பர்கள் நம்மிடம் இருக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன்.
இவரது கருத்தினை மட்டக்களப்பு நிருவாகிகள் சங்கம் கண்டித்ததாகத் தெரியவில்லை என சிறிநேசன் மேலும் தெரிவித்துள்ளார்.