
மின் தடை தொடர்பான அறிவிப்பு

புதன்கிழமை (08) முதல் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் வழமை போன்று இடம்பெறும் என்று இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க,
நேற்று (05) தெரிவித்தார்.
எனினும், இன்று (06) மற்றும் நாளை (07) சில பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த வெள்ளிக்கிழமை (03) முற்பகல் 11.30 மணியளவில் பிரதான மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டது.
எவ்வாறாயினும், சுமார் 6 மணித்தியாலங்களுக்குப் பின்னர் மின் விநியோகம் வழமைக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் அமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு வரை நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை.
எனினும், சனிக்கிழமை காலைக்குள் மின்சார விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்பியதாக மின்சார சபை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பும் வரை நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணித்தியால மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என மின்சார சபை அறிவித்திருந்தது.
இரவு 6 மணி முதல் 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படக்கூடும் என்று ஏற்கெனவே அறிவிக்கபட்டிருந்த நிலையிலேயே இன்று, நாளை மட்டும் மின்விநியோகம் தடைப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.