சூட்சுமமான முறையில் 23 கொள்ளைச் சம்பவங்கள்! இருவர் கைது

மட்டு அம்பாறை மாவட்டங்களில் பல வருடங்களாக 23 இற்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 25 பவுண் தங்க நகைகளும் ஒரு ஆட்டோ உள்ளிட்ட மூன்று மோட்டார் சைக்கிளும் 3320 மில்லிகிறாம் ஹெரோயின் போதைப்பொருளும் கொள்ளையிட பயன்படுத்திய ஆடைகள் மற்றும் மணிக்கூடு ஒன்றும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனை அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் தெரியவருகையில்,

கடந்த பல வருடங்களாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மிகவும் சூட்சுமமான முறையில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இறக்காமம் வாங்காமப் பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிகவும் சாதூர்யமான முறையில் தனியாக செல்லும் பெண்களின் நகைகளை கொள்ளையிடுவதுடன் இதற்காக வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களையும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இவ்வாறு கொள்ளையிடும் பொருட்களை விற்று அதில் இருந்து கிடைக்கும் பணத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் சூதாட்டம் போன்ற செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் பொலிசாரின் கண்களில் சிக்காமல் மறைந்திருந்த நிலையில், பொலிசாரும் குற்றவாளிகளை வலை விரித்து தொடர்ந்தும் தேடி வந்தனர்.

இந்நிலையில் குறித்த நபர்கள் இருவரும் இறக்காமம் வாங்காமப்பிரதேசத்தில் மறைந்திருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அங்கு விரைந்த பொலிசார் இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் அக்கரைப்பற்று நீதிமன்றில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ஆஜர்படுத்தி 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதியையும் பெறப்பட்டது.

அத்துடன், இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு ஏறாவூர் காத்தான்குடி களுவாஞ்சிக்குடி மற்றும் அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று திருக்கோவில் கல்முனை சம்மாந்துறை சவளக்கடை மத்திய முகாம் உகன போன்ற பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, குற்றங்களுடன் சம்மந்தப்பட்ட இருவரையும் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிசார் இன்று நடவடிக்கை எடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *