நாட்டில் இன்று என்ன நடக்கின்றது? மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் சூழலும் இல்லை! திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி

நாட்டில் இன்று என்ன நடக்கின்றது? நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் சூழலும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

திஸ்ஸ அத்தநாயக்கவின் ஆன்மிகப் பயணத்தின் ஓர் அங்கமாக நேற்று நுவரெலியா – வலப்பனை நாராங்தலாவ, மைலகஸ்தென்ன ஸ்ரீ தர்மராஜராமய விகாரையின் விகாராதிபதியைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதன் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமது கருத்துகளை, நிலைப்பாடுகளை சுதந்திரமாக பாராளுமன்றத்துக்குள் வெளியிடும் உரிமை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டும். அந்த உரிமையைப் பயன்படுத்தி கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தாக்க முற்படுவது, அவருக்கு அச்சுறுத்தல் விடுப்பது என்பன ஏற்புடைய விடயமாக அமையாது.

அவற்றைக் கண்டிக்க வேண்டும். அதேபோல் பாராளுமன்றத்துக்குள் கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற சம்பவங்களானவை ஜனநாயக ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

எதிரணி எம்.பிக்களுக்கு எதிரான அச்சுறுத்தலை ஏற்கமுடியாது. எனவேதான், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை சபை அமர்வுகளைப் புறக்கணிப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். அதற்கான நடவடிக்கை எவ்வாறு இடம்பெறும் என்பதை கட்சியின் பாராளுமன்றக் குழு தீர்மானிக்கும்.

குறிப்பாக பாராளுமன்றம் தொடர்பில் மக்களுக்கு தற்போது நன்மதிப்பு இல்லை. எனவே, பாராளுமன்றத்துக்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுத்து மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கும், கட்சித் தலைவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கின்றது.

அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பாராளுமன்றமும் வன்முறைக் களமாக மாறும் அபாயம் உள்ளது.

நிவாரணங்கள் கிடைக்கும், சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்த அரசுக்கு மக்கள் வாக்களித்தனர். அந்த எதிர்ப்பார்ப்பு ஒரு வருடத்துக்குள்ளேயே தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருக்கின்றது. எனவே, அதற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறான நடவடிக்கைகள் ஜனநாயக ஆட்சிக்கு விரோதமான செயற்பாடுகளாகும்- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *